Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியரசுத் தலைவர் குழுவில் முதல் பெண் ராணுவ வீராங்கனை!

ராணுவ சீருடையும், கம்பீரமான நடையும், கண்களில் நாட்டின் மீதான தீராத பக்தியும் கொண்ட அந்த இளம்பெண், குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரம்மாண்டமான நடைபாதையில் நடந்து வருகிறார். அவரைச் சுற்றியுள்ள உலகம் பெருமையுடன் பார்க்கிறது. அவர் வேறு யாருமல்ல, இந்திய ராணுவத்தின் மேஜர் நவ்யா ஷெகாவத். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகக் குடியரசுத் தலைவரின் ‘எய்ட்-டி-காம்ப்’ (Aide-de-Camp - ADC) என்ற மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய ராணுவப் பெண் அதிகாரி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் நவ்யா.

சிறுவயது முதலே தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவு நவ்யாவின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருந்தது. அந்த லட்சியக் கனவை நனவாக்க, அவர் எதிர்கொண்ட சவால்கள் சாதாரணமானவை அல்ல. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் புகழ்பெற்ற மற்றும் மிகவும் கடினமான சிடிஎஸ் (Combined Defence Services) தேர்வை எழுதி, அதில் தனது திறமையால் வெற்றி பெற்று சென்னை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (OTA Chennai) காலடி எடுத்து வைத்தார்.

சென்னையில் நடைபெற்ற கடுமையான உடற்பயிற்சிகள், மன உறுதியைச் சோதிக்கும் பயிற்சிகள் மற்றும் தலைமைப் பண்புக்கான சவால்கள் என அனைத்தையும் நவ்யா புன்னகையுடனும் விடாமுயற்சியுடனும் எதிர்கொண்டார். பயிற்சிகளைச் சிறப்பாக முடித்து, 2021ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான ‘ஆர்மி சர்வீஸ் கோர்ப்ஸ்’ (Army Service Corps - ASC) பிரிவில் அதிகாரி யாகப் பொறுப்பேற்றார். இந்த வரலாற்று சிறப்புமிக்க படைப்பிரிவு, ராணுவத்திற்குத் தேவையான பொருட்கள், போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்கும் மிக முக்கியமான பொறுப்பைக் கொண்டது.

ராணுவப் பணியில் நுழைந்த ஐந்தே ஆண்டுகளில், தனது அசைக்க முடியாத கட்டுப்பாடு, தொழில்முறை நேர்த்தி மற்றும் தலைமைத்துவத் திறமையால் மேஜராகப் பதவி உயர்வு பெற்றார் நவ்யா. ஆனால், அவரது பயணத்தின் உச்சக்கட்ட தருணம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் பிரத்யேக ஏடிசி அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டபோது நிகழ்ந்தது. ஏடிசி என்பது சாதாரணமான பணி அல்ல; தேசிய அளவிலான அரசு விழாக்கள், சர்வதேச தூதரக சந்திப்புகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளின்போது குடியரசுத் தலைவருடன் அருகிருந்து, அரசு விதிமுறைகளையும் ராணுவ வழிமுறைகளையும் செவ்வனே நிர்வகிக்கும் மிக உயர்ந்த மற்றும் பொறுப்பான பணி.

முன்னதாக இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் யஷஸ்வி சோலங்கி முதல் பெண் ஏடிசியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய ராணுவத்தில் இருந்து இந்த கௌரவத்தைப் பெறும் முதல் பெண் அதிகாரி என்ற வரலாற்றை நவ்யா படைத்தார். குடியரசுத் தலைவரின் அருகாமையில், ராணுவ உடையில் கம்பீரமாக நின்றபடி நவ்யா பணிகளை ஆற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியபோது, அது பல கோடி இந்தியர்களுக்கு, குறிப்பாக ஆயுதப் படையில் சேரத் துடிக்கும் இளம் பெண்களுக்கு மாபெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.

1992ஆம் ஆண்டில்தான் பெண்கள் குறுகிய காலச் சேவையில் முதன்முதலில் ராணுவத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து தொடங்கிய பெண்களின் ராணுவப் பயணம், இன்று குடியரசுத் தலைவரின் பிரத்யேக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பணிக்குழு வரை உயர்ந்துள்ளது என்பதை மேஜர் நவ்யா ஷேகாவத்தின் கதை உலகுக்கு உணர்த்துகிறது. திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் பாலினம் தடையில்லை என்பதைத் தனது கடின உழைப்பால் நிரூபித்திருக்கும் நவ்யா ஷேகாவத், இந்திய நாட்டின் பெண் சக்தி யின் நிஜமான அடையாளமாகத் திகழ்கிறார். இவரைப் பார்த்து இன்னும் பல பெண்கள் இந்திய ராணுவத்தில் இன்னும் உயரிய பொறுப்புகளில் அமர்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

- ஷாலினி நியூட்டன்