Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உறுதியான நிலைப்பாடு

2026-27ம் கல்வியாண்டு முதல் தேசிய கல்வி கொள்ைகயின்படி, பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் ‘மும்மொழி கொள்கை’ நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ (ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம்) அறிவித்துள்ளது. இது மொழிசார்ந்த நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மும்மொழி கொள்கையை ஏற்காத தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இடர்பாடுகள் நிறைந்த நிதி சிக்கலை எதிர்கொண்டது தமிழ்நாடு அரசு.

ஆனாலும் தாய்மொழியை காத்து, பிறமொழி திணிப்பை எதிர்ப்பதில் ஓய்ந்து விடாமல் தீரத்துடன் போராட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது தமிழ்நிலம். இப்படிப்பட்ட நிலையில் தான், ‘ஆறாம் வகுப்பில் இருந்து இனி மும்மொழி கொள்கை’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ. இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தேசிய கல்வி கொள்கை 2020ஐ சார்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது சாதாரண கல்வி சீர்திருத்தம் அல்ல.

அது மொழி திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்’ என்பதை கோடிட்டு காட்டியுள்ளார்.  இது மட்டுமின்றி, ‘‘இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான, பன்மைத்துவம் நிறைந்த மொழி பாரம்பரியத்தை திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பாஜ தலைமையிலான என்டிஏ அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மும்மொழி கொள்கை என்பது உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். தென்மாநில மாணவர்களை பொறுத்தவரையில் இந்த திட்டம், கட்டாய இந்தி திணிப்பை கடந்து வேறேதும் இல்லை,’’ என்பதையும் ெவளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளை கட்டாயமாக படிப்பார்களா? என்ற முதல்வரின் கேள்வியும், இந்த திட்டத்தில் உள்ள தெளிவின்மை, ஒருசார்பு, பாகுபாடு போன்றவற்றை தோலுரித்து காட்டியுள்ளது.

இவை அனைத்திற்கும் மேலாக, ‘‘முன்எப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகருகிறது. இந்தவேளையில் நம் குழந்தைகள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், கேமிங் காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அதோடு அறிவியல் பார்வையையும், திறனாய்வு சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும்.

இதற்கு மாறாக இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச்சுமை அவர்களது முன்னேற்றத்தை தடுப்பதாக உள்ளது’ என்று தனது தொலைநோக்கு பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் இந்தியாவின் வலிமை என்பது பன்முகத் தன்மையில் தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றை தன்மையில் இல்லை.

இந்த சமநிலையை குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. நம்நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள், கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதாகும்’ என்பதையும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். இது இந்தி திணிப்பில் எதிர்ப்பு என்ற தமிழ்நிலத்தின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் பறைசாற்றியுள்ளது.