கார்கே பேசிய இடத்தை சுத்தம் செய்தவர்களை கண்டித்த ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு: குற்றம் சாட்டுபவரே குற்றவாளியா?.. பாஜ மீது காங்கிரஸ் சாடல்
புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் சமீபத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் சுத்திகரிப்பு சடங்கு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காங்கிரசின் பல்வேறு தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பேட்டி அளித்தார். இதுதொடர்பாக உத்தரகாண்ட் போலீசார் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘இது குற்றம்சாட்டுபவரே குற்றவாளி என்ற பழமொழிக்கு சரியான உதாரணம். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், சாதியப் பாகுபாடு கொண்ட இந்த அருவருப்பான செயலை பாஜ நியாயப்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம் சமூக அநீதி இழைப்பதில் தாங்களே முன்னணியில் இருப்பதை அவர்களே உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையிலும் ராகுலுக்கு எதிரான இந்த அடிப்படையற்ற எப்ஐஆர் குப்பைத் தொட்டியில் வீசப்படும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம்.
நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள்’’ என்றார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமாரி செல்ஜா எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு சுத்திகரிப்பு சடங்கை நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அந்தச் சாதிய மனப்பான்மை கொண்ட செயலுக்கு எதிராகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் பாஜ அரசின் நீதியா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



