ரூ.41,921 கோடி நிதி மோசடி புகார்; பிரபல இணையதளங்கள் மீது அவதூறு வழக்கு: தொழிலதிபர் அனில் அம்பானி முறையீடு
புதுடெல்லி: தனது நிறுவனம் ரூ.41,921 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட புலனாய்வு இணையதளம் மற்றும் முன்னணி பத்திரிகைகள் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரூ.41,921 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக, பிரபல புலனாய்வு இணையதளம் கடந்த அக்டோபர் 30ம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட குழும நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.28,874 கோடி, நிறுவனர் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாகவும், கூடுதலாக ரூ.13,000 கோடி வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த செய்தியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறிப்பிட்ட புலனாய்வு இணைய தளம் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற முன்னணி பத்திரிகை நிறுவனங்கள் மீது அனில் அம்பானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள், ‘பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், பங்கு விலைகளை சீர்குலைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் பிரசாரம்’ என்று அனில் அம்பானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் சிவில் நீதிபதி விவேக் பெனிவால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே பொதுவெளியில் உள்ள பழைய தகவல்கள் என்றும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் செபி போன்ற அமைப்புகளால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவை என்றும் ரிலையன்ஸ் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
