Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி, கல்வி, மொழி, மாநில உரிமையில் பாகுபாடு காட்டுவதை போல் தொகுதி மறுவரையறையிலும் தமிழ்நாட்டிற்கு அநீதி: அனைத்திலும் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசு

தமிழ்நாடு என்றாலே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதுவரை மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு, கல்வி, மொழி, மாநில உரிமையில் பாகுபாடு காட்டி வந்த பாஜ அரசு, இப்போது தொகுதி மறுவரையறை விஷயத்திலும் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் பல வழிகளிலும் தமிழ்நாட்டை மோடி அரசு வஞ்சித்து வருகிறது. குறிப்பாக வரி வருவாய் பகிர்வில் வடமாநிலங்களுக்கு அதிகமாகவும் தமிழ்நாட்டிற்கு மிக சொற்ப அளவிலும் நிதி வழங்கி வருகிறது.

ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்த போதிலும், தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சுமார் 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப கிடைக்கிறது. இதுவே உத்தரப்பிரதேசம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு சுமார் 2.73 ரூபாய் திரும்பி தருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டமும் அறிவிக்கப்படுவதில்லை. ரயில்வே திட்டங்களும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கிறது. இதனால் 10 ஆண்டாகியும் இன்னும் மதுரை எய்ம்ஸ் திட்டம் முடிந்தபாடில்லை. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கவும் ஒன்றிய பாஜ அரசு மறுத்து விட்டது.

எந்தவொரு வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கும் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில்லை. 2023ல் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்குப் பின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதி கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட வேண்டியிருந்து. இதுவே குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறு மழைக்கு கூட வெள்ள நிவாரண நிதிகளை பாஜ அரசு அள்ளி வழங்குகிறது. இதே போல, தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவதிலும் ஒன்றிய நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்க வேண்டுமென பெரும் முயற்சிகள் செய்யும் ஒன்றிய பாஜ அரசை தட்டிக் கேட்கும் ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை பல ஆண்டாக மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதோடு, பிரதமர் மோடிக்கு பலமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் எந்த பிரயோஜனமும் இல்லை. இறுதியில் ஒன்றிய அரசு நிதி தராத நிலையில் கல்வி திட்டங்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தனது சொந்த பட்ஜெட்டில் இருந்து நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை அமல்படுத்த விடாமல் ஆளுநர் மூலம் தடுத்து மாநில உரிமையில் தலையிட்டது. கல்வி, மருத்துவம் போன்ற மாநிலப் பட்டியலிலும், பொதுப் பட்டியலிலும் உள்ள துறைகளில் ஒன்றிய அரசு தன்னிச்சையான சட்டங்களை திணிக்கிறது. இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியிலும் இதுவரையிலும் ஒன்றிய பாஜ அரசிடம் திமுக அரசு பணியவில்லை. அதே சமயம், டெல்லியிலிருந்து நிதி வராத போதிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்மாதிரியான பொருளாதார கொள்கைகளுடன் தமிழ்நாட்டை பல துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றி இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதை அறிந்த பாஜ அரசு, வடமாநிலங்களை வைத்தே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்துடன் மக்களவை தொகுதிகளை சீரமைக்கும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வந்துள்ளது. இதிலும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜ அரசு பெரும் அநீதி இழைத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளின் 550 உச்ச வரம்பை 850 ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி சதவீதத்தை குறைத்து உபி, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களின் தொகுதி சதவீதத்தை கணிசமாக உயர்த்தி அந்த மாநிலங்களின் வெற்றி மூலம் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதே மோடி அரசின் நோக்கமாகும். இதற்காக பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை திருத்தும் அரசியலமைப்பு சட்ட திருத்துடன் சேர்த்து தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்து குறுக்கு வழியில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற மோடி அரசு முயற்சிக்கிறது.

இந்த தொகுதி மறுவரையறை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் மக்கள்தொகை பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் நிலையில், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் அலட்சியமாக இருந்த உபி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு பரிசளிப்பது போன்ற அதிக தொகுதிகள் கிடைக்க உள்ளன. 2011ம் ஆண்டின் மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 815 ஆக அதிகரிப்படும் பட்சத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் தனது தற்போதைய 80 இடங்களுடன் கூடுதலாக 58 இடங்களைப் பெற்றுக்கொள்ளும்.

பீகாரின் தொகுதிகள் 40ல் இருந்து 72 ஆக அதிகரிக்கும். அதேசமயம், தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள 39 இடங்கள் 50 ஆக அதிகரிக்கும். கேரள மாநிலத்திற்கு 3 இடங்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைத்து, அதன் மொத்த இடங்களின் எண்ணிக்கை 20-லிருந்து 23-ஆக உயரும். இதன் விளைவாக, மக்களவையில் உத்தரப் பிரதேசத்தின் பங்கு 14.73 சதவீதத்திலிருந்து 16.24 சதவீதமாக உயரும். தமிழ்நாட்டின் தற்போதைய பங்களிப்பு விகிதம் 7.18 சதவீதத்திலிருந்து 5.88 சதவீதமாகக் குறையும்.

கேரளாவிற்கு 3.68 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறையும். அதுவே பீகாருக்கு 7.37 சதவீதத்தில் இருந்து 8.47 சதவீதமாக அதிகரிக்கும். இதன் மூலம் வடமாநிலங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும் மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இனி வரும் காலங்களில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு விடும். இதன் காரணமாகவே இந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்த்து வருகின்றன.

* தென் மாநிலங்களின் பலம் கடுமையாக சரியும்

தற்போதைய 543 மக்களவை இடங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் சராசரி விகிதம் 24.3 சதவீதமாக உள்ளது. இதுவே 850 ஆக தொகுதிகள் அதிகரிக்கப்பட்ட பிறகு 20.7 சதவீதமாக சரியும். தென் மாநிலங்களில் மொத்தம் 33.3 சதவீத அளவுக்கு மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதுவே இந்தி பேசும் மாநிலங்களின் பங்கு 38.1 சதவீதத்தில் இருந்து 43.1 சதவீதமாக அதிகரிக்கும். அதாவது, 76.8 சதவீத தொகுதிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்கப்படும். கிழக்கு பிராந்திய மாநிலங்களில் 48.7 சதவீதத்திற்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அப்படி என்றால் இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி அல்லாத பிற வடமாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் கவனம் செலுத்தினால் மட்டுமே மத்தியில் பாஜ ஆட்சியை பிடித்து விட முடியும்.