பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் பா.ஜ வந்தபிறகு நாடு முழுவதும் பா.ஜவின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014ல் பா.ஜ தனியாக 6 மாநிலங்களிலும், கூட்டணியாக 2 மாநிலங்களிலும் ஆட்சி நடத்தியது. இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் 17 மாநிலங்களில் பா.ஜ மட்டும் தனியாக ஆட்சி நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ கையாண்ட விதம் அழுக்கு அரசியல்.
2014ல் நாட்டில் பலம் பொருந்திய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை கரைத்தது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அப்படியே பா.ஜவுக்கு மாறி, புதிதாக பா.ஜ ஆட்சி உருவாக்கப்பட்டது. பா.ஜ, காங்கிரஸ் நேரடி போட்டி உள்ள மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியை இப்படி கரைத்து தன்னுள் இணைத்துக்கொண்டது பா.ஜ. தற்போது காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட பா.ஜவின் பார்வையில் இருந்து தப்பவில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிரா அரசியல்.
அங்கு காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை வீழ்த்த அவரது கட்சியில் இருந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை கையில் எடுத்து, அவருக்கு முதல்வர் பதவியை அளித்து சிவசேனா கட்சியை இரண்டாக பிளந்தது பா.ஜ. அதோடு நிற்கவில்லை. சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாதகாங்கிரஸ் கட்சியையும் இரண்டாக உடைத்தது. உபயம் அஜித்பவார். அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. அதன்பின் வந்த மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ தனிப்பெரும்பான்மை பெற்றது.
இப்போது மகாராஷ்டிராவில் பா.ஜவை சேர்ந்த பட்நவிஸ் முதல்வராக உள்ளார். அதே போல் ஒரு அழுக்கு அரசியலை தற்போது மேற்குவங்கத்தில் அமல்படுத்தி வருகிறது பா.ஜ. மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராக ஒருகாலத்தில் இருந்த சுவேந்து அதிகாரியை குறிவைத்து பா.ஜவில் இணைத்தது. அதை தொடர்ந்து மம்தாவுக்கு எதிராக சுவேந்துவை தயார்படுத்தி கொம்பு சீவி வந்தது.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ யுக்தி வெற்றி பெற்றுவிட்டது. அங்கு தற்போது மம்தா வீழ்த்தப்பட்டு பா.ஜவின் புதிய முதல்வராக சுவேந்து பதவி ஏற்றுள்ளார். ஆனாலும் பா.ஜ திருப்தி அடையவில்லை. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுவிழக்கச்செய்யும் யுக்திகள் தொடங்கப்பட்டுவிட்டன. மம்தாவின் உத்தரவை திரிணாமுல் எம்பி, எம்எல்ஏக்கள் கேட்காத வண்ணம் ஆளும் கட்சியான பா.ஜ சார்பில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. கேட்காதவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு மேற்குவங்கத்தில் அரசியல் பிரளயமே நடந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பா.ஜவின் அழுக்கு அரசியல் தான். தமிழ்நாட்டிலும் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இதில் வீழ்ந்து இருப்பது அதிமுக தான். 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக தொடர் தோல்விகளால் எழுந்து நிற்கவே முடியாத இடத்திற்கு சென்று விட்டது. இனி எதிர்காலமே இல்லை என்ற குரல் அதிமுகவுக்கு உள்ளேயே எழுந்து இருப்பது வேதனையின் உச்சம். பா.ஜவின் அழுக்கு அரசியலில் சிக்கி அதிமுகவும் பலவீனப்பட்டு நிற்கிறது.
