Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

சென்னை: குடும்பங்கள் கொண்டாடும் படங்களை தந்த இயக்குனர் வி.சேகர் (72) கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். திருவண்ணாமலை, நெய்வாநத்தம் என்ற கிராமத்தில் 1953 பிப்ரவரி 15ம் தேதி பிறந்தவர், வி.சேகர். தனது 19 வயதில் ஏ.வி.எம். ஸ்டுடியோ 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்த இவர் மாநகராட்சி சுகாதார துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இதற்கிடையில் மாலை நேர கல்லூரியில் எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தார்.

கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் வேலை செய்த இவர் 1990ம் ஆண்டு வெளியான ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘வீட்டோட மாப்பிள்ளை’, ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘ஆளுக்கொரு ஆசை’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், மீனா நடிப்பில் ‘ஹெந்தீர் தர்பார்’ என்ற படத்தை இயக்கினார்.

தனது குடும்ப பாங்கான படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரது படங்களின் காமெடி காட்சிகளும் அதிகம் பேசப்படும். ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று காலமானார். வி.சேகருக்கு, தமிழ் செல்வி என்ற மனைவியும், மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர். வி.சேகரின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.