வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால் அத்திப்பழம் அரசர்கள் சாப்பிடக்கூடிய பழம் எனக் கூறுகிறார்கள். அதேபோல, அத்தி மற்றும் அத்தி இலைகள் ரோம் சமூகத்தின் ஆடம்பர வாழ்வைக் குறிக்கிறது. அந்த அளவுக்கு அத்தியும், அத்தி கொண்டு தயாரிக்கப்படுகிற உணவுப் பொருட்களும் செல்வந்தர்கள் மட்டுமே ருசிக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஆனால், இந்தக் காலத்தில் அப்படி எதுவும் கிடையாது. உலகெங்கும் கிடைக்கப்பெறுகிற காக்டெய்ல் மெனுக்களில் அத்தி இலை பயன்படுத்தப்படுகிறது. அந்தளவிற்கு உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்த உணவுகளில் அத்தியும் ஒன்று. அத்தி இலையானது காக்டெய்ல் மெனுக்களைத் தாண்டி ஐஸ்கிரீம் முதல் இறைச்சி வரை எல்லாவற்றிலும் பயன்படுகிறது. இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட பலருமே அத்தி இலையைப் பயன்படுத்தி பலவகையான இனிப்புகள், கிரீம் மற்றும் மூலிகைகளும் தயாரித்து பயன்பெறுகிறார்கள். அந்தளவிற்கு அத்தி இலைகளும், அதைக்கொண்டு தயாரிக்கப்படுகிற உணவுப் பொருட்களும் மக்களிடையே பிரபலமடைந்து இருக்கிறது.
இது சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் செரிமான பிரச்னைகளையும் சரி செய்கிறது. உலகம் முழுவதும் ஆடம்பர உணவுகளில் பயன்படுத்தப்பட்ட அத்தி இலையானது ஆரோக்கியத்திற்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல், சித்த மருத்துவத்தில் இதனை உயிர் காக்கும் அத்தி எனச் சொல்வார்கள். அந்தளவிற்கு ஆரோக்கியம் நிறைந்த இந்த அத்தி இலையை நமது அன்றாட உணவுகளில் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றால், உணவு தயாரிப்பின்போது சீஸ் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் அத்தி இலையைப் பயன்படுத்தலாம். அதேபோல பாஸ்தா செய்யும்போதும் இந்த இலையைப் பயன்படுத்தலாம். இறைச்சி சமைக்கும்போதும் இதனைப் பயன்படுத்தலாம். அதேபோல, மோகிடோஸ் போன்ற குளிர்பானங்கள் தயாரிக்கும்போதும் இந்த அத்தி இலையைப் பயன்படுத்தலாம். அத்தி இலையைக் கொண்டு தயாரிக்கப்படுகிற தேநீரை இரவு உணவிற்குப் பிறகு எடுத்துக்கொள்வது நல்லதும்கூட.


