Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிபா உலகக்கோப்பை கால்பந்து 2026: ஆஸ்திரியாவை வீழ்த்தி முன்னேறியது ஸ்பெயின்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. லாஸ் ஏஞ்சல்ஸ் அரங்கில் நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு மைகேல் ஒயர்ஸபால் 36வது நிமிடத்தில் கோல் போட்டு 1-0 என முன்னிலை கொடுத்தார்.

இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டு பல கோல் முயற்சிகளை முறியடித்ததால், இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியிலும் துடிப்புடன் விளையாடி தாக்குதலைத் தொடர்ந்த ஸ்பெயின் அணிக்கு பெட்ரோ போரோ 66வது நிமிடத்தில் கோல் அடிக்க, மைகேல் ஒயர்ஸபால் 89வது நிமிடத்தில் தனது 2வது கோலை வலைக்குள் திணிக்க, ஸ்பெயின் அணி ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று ரவுண்ட் ஆப் 16ல் நுழைந்தது.

ஆஸ்திரியா அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை.

கோல் விழாமல் 519 நிமிடம்! கீப்பர் சைமன் உலக சாதனை

ஸ்பெயின் கோல் கீப்பர் யுனய் சைமன் தொடர்ச்சியாக 5 உலக கோப்பை ஆட்டங்களில் ஒரு கோல் கூட விழாமல் பார்த்துக்கொண்டுள்ளார். 2022ல் மொராக்கோவுடன் 0-0 என டிரா செய்ததில் தொடங்கிய இந்த பயணம், ஆஸ்திரியாவுடனான ரவுண்ட் ஆப் 32 போட்டி வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது. இதன் மூலம் 1990ல் வால்டர் ஸெங்கா படைத்த சாதனையை சமன் செய்துள்ள சைமன், ஸெங்காவின் 517 நிமிட சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார். சைமன் இதுவரை 519 நிமிட கோல் கீப்பர் பணியில் ஒரு கோல் கூட விழாமல் பார்த்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசத்திய ஒயர்ஸபால்

1986ல் எமிலியோ புட்ராகுயினோ ஸ்பெயின் அணிக்காக நாக் அவுட் போட்டியில் 2 கோல் அடித்திருந்தார். அதன் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் ஸ்பெயின் வீரர் என்ற பெருமை ஒயர்ஸபாலுக்கு கிடைத்துள்ளது. ஸ்பெயின் அணி 2010 உலக கோப்பை தொடருக்குப் பிறகு தற்போதுதான் நாக் அவுட் சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.