பண்டிகை என்றாலே புத்தாடைகள், அணிகலன்கள், அழகான அலங்காரம் என நம்மைத் தயார்படுத்திக்கொள்வதில் தனி ஆர்வம் இருக்கும். ஆனால், முகத்தில் சோர்வும் பொலிவின்மையும் இருந்தால் எவ்வளவு அழகாக அலங்கரித்துக்கொண்டாலும் மனதிற்குத் திருப்தி இருக்காது. குறிப்பாக, நெற்றி, மூக்கு, தாடைப் பகுதிகளில் எண்ணெய்ப்பசையும், கன்னங்களில் வறட்சியும் கொண்ட கலப்புச் சருமம் உடையவர்கள் பண்டிகைக் காலத்தில் சருமப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பண்டிகைக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களே இருந்தாலும், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கலாம்.
காலையில் பராமரிப்பது அவசியம்!
முதலில், முகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். காலையில் எழுந்ததும் சாதாரணமான அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவலாம். முகத்தில் எண்ணெய்ப்பசை அதிகமாக இருந்தால், சருமத்துக்கு ஏற்ற மென்மையான முகச் சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிய பிறகு துணியால் அழுத்தித் தேய்க்காமல், மென்மையாக ஒற்றி ஈரத்தை அகற்ற வேண்டும்.
சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் முகம் வறண்டு, சோர்வாகத் தோன்றும் என்பதால், சருமத்துக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் பூச்சைத் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது. கன்னங்களில் வறட்சி அதிகமாக இருந்தால் அந்தப் பகுதிகளில் மட்டும் சற்றுக் கூடுதலாகப் பயன்படுத்தலாம்.
வெயிலிலிருந்து சருமத்தைக் காப்போம்!
பகல் நேரத்தில் வெளியே செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதும் முக்கியம். வெயிலால் சருமத்தில் நிறமாற்றமும் கரும்புள்ளிகளும் ஏற்படலாம். எனவே, சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் முப்பது அல்லது அதற்கு மேற்பட்ட பாதுகாப்புக் குறியீடு கொண்ட சூரியக் கதிர் தடுப்புப் பூச்சைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் அவசியம். வெளியில் அதிக நேரம் செலவிடும்போது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பூசுவதும் அவசியம்.
இரவில் பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்!
நாள் முழுவதும் முகத்தில் படிந்த தூசி, வியர்வை, அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற வேண்டும். குறிப்பாக, முகத்தில் அலங்காரம் செய்திருந்தால் அதை முழுமையாக நீக்கிய பிறகே உறங்கச் செல்ல வேண்டும். அதன் பிறகு சருமத்துக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் பூச்சைப் பயன்படுத்தலாம். இரவில் சருமத்தைப் பராமரிப்பதுடன் போதுமான நேரம் உறங்குவதும் முகத்தின் புத்துணர்ச்சிக்கு உதவும். தூக்கமின்மை முகத்தில் சோர்வான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தினமும் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் வரை தூங்க முயற்சி செய்யுங்கள்.
வீட்டிலேயே எளிய பராமரிப்பு!
வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பராமரிப்பு முறைகளும் உள்ளன. சுத்தமான துணியைச் சாதாரணமாகக் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து, முகத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மென்மையாக வைக்கலாம். இது முகத்துக்குத் தற்காலிகமான குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
அதேபோல், குளிர்ச்சியாக வைக்க வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சில நிமிடங்கள் வைக்கலாம். இதனால் தற்காலிகமாகக் குளிர்ச்சியான உணர்வு கிடைக்கலாம். எனினும், இத்தகைய முறைகள் சருமத்தின் இயற்கையான நிறத்தை மாற்றும் அல்லது கரும்புள்ளிகளை முழுமையாக நீக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
கடைசி நேரத்தில் இந்தத்தவறுகளைத் தவிருங்கள்!
பண்டிகைக்கு மூன்று அல்லது நான்கு நாட்களே இருக்கும் நிலையில், புதிய அழகுப் பராமரிப்பு முறைகளை முயற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கொண்டு முகத்தைத் தேய்த்தல், சமையல் சோடா, கடுமையான முகப்பூச்சுகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். இவை சருமத்தில் எரிச்சல், வறட்சி மற்றும் நிறமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கெனவே பயன்படுத்திப் பழகிய பொருட்களையே தொடர்ந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது. முகப்பரு அல்லது உணர்திறன் அதிகம் கொண்ட சருமம் இருந்தால், புதிய வீட்டுப் பராமரிப்பு முறைகளை முயற்சி செய்வதிலும் கவனம் தேவை.
உணவும் தூக்கமும் தரும் பொலிவு!
சருமத்தின் ஆரோக்கியத்துக்கு வெளிப்புறப் பராமரிப்பு மட்டுமல்லாமல், உணவுப் பழக்கமும் முக்கியமானது. தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவும். பண்டிகைக்கு முந்தைய நாள் சருமத்துக்கு அதிக ஓய்வு கொடுங்கள். இரவில் முகத்தைச் சுத்தப்படுத்தி ஈரப்பதமூட்டும் பூச்சைப் பயன்படுத்திய பிறகு, போதுமான நேரம் தூங்குங்கள். கடைசி நேரத்தில் முகத்தைப் பொலிவாக்க வேண்டும் என்று பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துவதைவிட, வழக்கமான பராமரிப்பைத் தொடர்வதே நல்லது.
பண்டிகை நாளில்பளிச் தோற்றம்!
பண்டிகை நாளன்று முகத்தைச் சுத்தப்படுத்தி, ஈரப்பதமூட்டும் பூச்சைப் பயன்படுத்திய பிறகு அலங்காரம் செய்துகொள்ளலாம். சருமம் வறண்டு காணப்படும் பகுதிகளில் மட்டும் கூடுதல் ஈரப்பதமூட்டும் பூச்சைப் பயன்படுத்தினால், முக அலங்காரம் சீராக அமைய உதவும். சூரிய ஒளியில் செல்ல வேண்டியிருந்தால் சூரியக் கதிர் தடுப்புப் பூச்சையும் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதைவிட, சருமத்துக்கு ஏற்ற பொருட்களைச் சரியான அளவில் பயன்படுத்துவது சிறந்தது. பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே சருமப் பராமரிப்பைத் தொடங்கினாலும், சருமத்தின் இயற்கையான நிறத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், வறட்சியைக் குறைத்து, சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மட்டுமே அழகான தோற்றத்துக்குக் காரணமல்ல. முறையான சுத்தம், ஈரப்பதப் பராமரிப்பு, சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு, சத்தான உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவையே ஆரோக்கியமான சருமத்துக்கான அடிப்படைகள்.
- ஷாலினி நியூட்டன்


