பண்டிகை கால சிறப்பு ரயில் தமிழகத்துக்கு வெறும் 44 தான்...: தெற்கு ரயில்வே மீது மக்கள் அதிருப்தி
தெற்கு ரயில்வேயை பொறுத்தளவில், சென்னை, மதுரை, திருநெல்வேலி, நார்கோவில், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறைக்கு மக்கள், நெருக்கடி இன்றி பயணிக்க வசதியாக இம்மார்க்கங்களில் இதுவரை 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள், 394 முறை இயக்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டில் 21 சிறப்பு ரயில்கள், 78 முறை மட்டும் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டி வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பண்டிகை காலங்களில் மக்கள் தவிப்புக்கு தீர்வு காணும் நிறைய சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவிலே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதுபோல், சிறப்பு ரயில்கள் இயக்கத்திலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி உள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.