Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கூட்டாட்சிக்கு ஆபத்து..!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 543 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. 1971ம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, இதற்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்திற்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தற்போதைய மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொண்டு, தொகுதிகளை அவசரம், அவசரமாக சீரமைக்க ஒன்றிய பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்று சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படுகிறது.

மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை, 543ல் இருந்து 850 ஆகவும், யூனியன் பிரதேச எம்பிக்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 35ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

அதேவேளையில், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 39ஆக உள்ள நிலையில், புதிய தொகுதி மறுவரையறை மசோதா மூலம் உறுப்பினர் எண்ணிக்கை 50 வரை உயரக்கூடும் எனக்கூறப்படுகிறது. அதேநேரம், உத்தரபிரதேசத்தில் தற்போது உள்ள 80 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 வரை உயர்கிறது. இதன்மூலம், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறைகிறது.

வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை உயர்வதால், சுமார் 8 அல்லது 10 வடமாநிலங்களில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தினால் போதும், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவே வெல்லும் என்கிற நிலை உருவாகும். தமிழ்நாட்டின் உரிமை மற்றும் கோரிக்கைகள் எதுவும் அங்கு எடுபடாமல் போகும். மாநில நலன்கள் பாதிக்கப்படும். வடமாநிலங்கள் கூடுதல் அதிகாரங்கள் பெறும். இந்த பேராபத்தை உணர்ந்து, புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை கண்டிக்கும் வகையில் வீடுகள் தோறும் இன்று கருப்புக்கொடி ஏற்றி அறவழி போராட்டம் நடத்தப்படும் என்றும் இன்று கூடுகிற நாடாளுமன்ற கூட்டத்தில், கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும், மாநிலமே ஸ்தம்பிக்கும் என்றும் எச்சரித்துள்ளார். தமிழக முதல்வர் போலவே, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும், ஒன்றிய பா.ஜ., அரசின் சூழ்ச்சியை கண்டித்துள்ளார். கேரளா, கர்நாடகா மாநில முதல்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய பா.ஜ., அரசின் இந்த செயல், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பறிப்பதுடன், நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்கு உள்ளாக்கும். எனவே, ஒன்றிய பா.ஜ அரசு, எதிர்கட்சி தலைவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து, அவசரம் காட்டாமல், நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.