வீட்டுக்கு பெரியவங்க வராங்க இன்னைக்காவது வேஷ்டி சட்டை உடுத்தினால் என்ன?’’. இப்படி எந்த வீட்டிலும் ஒரு இளம் வயது ஆணை பார்த்து யாருமே கேட்பதில்லை. ஆனால் இன்றாவது தாவணி உடுத்தினால் என்ன இன்னைக்காவது புடவை கட்டினால் என்ன என்கிற கேள்விகள் எப்பவுமே பெண்களைப் பார்த்து கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படி தோற்றம் குறித்து அதிகம் பயம் மற்றும் தயக்கம் உள்ளிட்டவை பெண்களுக்கு சிறுவயதில் இருந்தே கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த வயதில் எப்படி உடையணிய வேண்டும் எப்படி தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏராளமான உடைகள் மற்றும் காஸ்மெட்டிக் வகையாராக்களை அடுக்கி , எந்நேரமும் நாம் அழகாக இருக்க வேண்டும், இளமையாக இருக்க வேண்டும் என்கிற அழுத்தம் ஆண்களை விட பெண்களில் அதிகமாக தென்படுகிறது. அதிலும் 38 முதல் 40 நெருங்கும் பெண்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தைக் கூட சந்திக்கும் நிலை உண்டாவதாக சொல்கிறது உளவியல் ஆய்வுகள். எப்படி வயதாவதை மகிழ்வாக ஏற்றுக்கொள்வது, வழிகாட்டுகிறார் டாக்டர் எஸ். வந்தனா (மருத்துவ உளவியலாளர்).
“இதனை (Gerascophobia) என்போம். அதாவது தனக்கு , வயதாவதைக் கண்டு அதனால் உண்டாகும் பயம். குறிப்பாக இது ஆண் - பெண் இருவரிலும் 40ஐ நெருங்கும் போது அதிகமாக இருக்கும். பெண்களில் ஆண்களை விட இதன் தீவிரம் அதிகம். மனவியல் சிகிச்சையில் ஒரு நபரின் பார்க்கும் பார்வை மற்றும் வயதை எதிர்கொள்ளும் விதத்தை மாற்றும் பயிற்சிகளை அதிகம் கொடுப்போம். ஒவ்வொரு ஸ்டேஜிலும் நிகழும் மாற்றத்தை நேர்மறை எண்ணங்களுடன் அணுகும் பயிற்சிதான் அது. பெண்களைப் பொறுத்தவரை டீன் பருவத்தில் இருந்து இந்த அழுத்தம் துவங்கிவிடும். பதின் பருவத்திலிருந்து, கல்லூரி வாழ்க்கை, அடுத்து கல்யாண வாழ்க்கை, அடுத்து குடும்பம் மற்றும் குழந்தை, வேலை, இதில் எல்லாமே பெண்களுக்கு மல்டி டாஸ்கிங் திறமை தேவை என ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அந்த மல்டி டாஸ்கிங்கில் வயதும் சேர்ந்தே பின்னியிருப்பதுதான் இங்கே பிரச்னை. அதாவது நமக்கு இவ்வளவு பொறுப்புகள் இருக்கே, அதற்குள் நமக்கு வயது வேகமாக ஏறுகிறது என்கிற பயம். அடுத்து நான் இல்லை என்றால் இந்தக் குடும்பம் என்ன ஆகும், வீடு அப்படியே நின்று விடுமோ என்கிற எல்லாத்துக்கும் நான்தான் ஆணி வேர் என்கிற மனநிலையும் ஒரு காரணம். ஆனால் பெண்களை சொல்லி குற்றமில்லை, சிறுவயதில் இருந்தே இந்த பொறுப்புகளை சமூகம் அவர்கள் தலையில் ஏற்றிதான் வளர்க்கிறது”. இந்தத் தயக்கத்தை எப்படி நீக்குவது, என்ன செய்யலாம்.
“இதில் தான் நாம் விலங்குகளை பின்பற்ற வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாத இடைவெளியில் நாய் மற்றும் பூனை அதன் குட்டிகளை விரட்டி விடும். இனி அதுவாகத்தான் தங்களது வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தப்பிப் பிழைக்க வேண்டும். இந்த முறை மனிதர்களில் கிடையாது. குறைந்தது 20 வயது அதிகமாக சிலரில் 30 வயது வரை பெற்றோர் பார்வையில் தான் பிள்ளைகள் வளர்க்கிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை கையை பிடித்து வழிநடத்திக் கொண்டே இருக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடம் இருக்கிறது. அதிலும் குழந்தைகள் குணத்தால் அளவிடப்படுவது கூட அம்மா வளர்ப்பில் தான். இப்படி காலம் காலமாகவே ஒரு சில அழுத்தங்கள் காரணமாக பெண்களுக்கு வயதாகாமல் இருப்பது ஒரு அவசிய தேவையாகவும் மாறிவிட்டது’’ 40ஐக் கண்டு பயம் ஏன்விளக்கினார் எஸ்.வந்தனா.
“பொதுவாக இது மத்திம வயது நிலை, இளைஞர்கள் பட்டியலிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், வயதானவர்கள் பட்டியலிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் ஒரு நிலை. மேலும் வீட்டிலும் 20 (பிள்ளைகள்), 60(பெற்றோர்கள்)களுக்கு இடையே வாழ வேண்டிய சூழல் அழுத்தம் இருக்கும். 40 நெருங்கும் நிலையை மறு கண்டுபிடிப்பு (Reinvention) நிலை என்போம். அதாவது நமக்குள்ளேயே நிறைய மாற்றங்கள் நிகழும். இவ்வளவு நாள் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கொண்டிருந்த நாம் இப்போது நியாயமான விஷயங்களுக்கு கோபப்பட ஆரம்பித்திருப்போம். மேலும் எதையும் அவசரம் இல்லாமல் பொறுமையாக முடிவெடுக்கும் நிலைக்கும் மாறியிருப்போம். உணர்வுபூர்வமாக எதற்கும் இடம் கொடுக்காமல் பிராக்டிகல் வழிகளை தேர்ந்தெடுப்போம். இந்த மாற்றங்கள்தான் நாம் முதிர்ந்த நிலையை அடைந்ததற்கான அறிகுறிகள். மேலும் இந்த 35 முதல் 45 கால கட்டம்தான் சாண்ட்விச் வயது (Sandwich Age) என்போம், அதாவது ஒரு நபர் தன்னைப் பெற்றவர்கள் மற்றும் தான் பெற்றவர்கள் இருவரையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும். தன்னுடைய உடல் நிலையும் சின்னச் சின்ன பிரச்னைகள் தலைதூக்கத் துவங்கியிருக்கும். இதனால் மூன்று விதமான மனநிலைகளை கையாள வேண்டிய சூழல் உண்டாகும். ஒரு சில பெண்களுக்கு 40ஐக் கடக்கும் போதே மெனோபாஸ் அறிகுறிகள், அதனால் மனநிலை மாற்றங்கள் உண்டாகும். இதை எல்லாம் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் மறுகண்டுபிடிப்பு மற்றும் புதுப்பிப்பு. தன்னிலை அறிந்து தங்கள் தேவைகளை உணர்தல்’’ பெண்களில் இந்த வயதாகும் பிரச்னையை எதிர்கொள்ள என்னென்ன பயிற்சிகளை எடுத்துக்கொள்ளலாம் தொடர்ந்தார் எஸ். வந்தனா.
“ஆரோக்கியமான உடல், லேசான மனநிலைதான் அவசியம். போதுமான உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு, தனக்கான மீ டைம், நண்பர்களுடன் சந்திப்பு, பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துதல் போன்றவை அவசியம். குறிப்பாக குடும்பத்தார் ஆதரவும், அவர்களுக்கு உங்களின் ஆதரவும் முக்கியம். மேலும் இந்த காலகட்டத்தில்தான் எலும்பு தேய்மானம், கால்சியம் பற்றாகுறை போன்ற பிரச்னைகள் தலைத்தூக்கம், சரிவிகித உணவும், சீரான தூக்கமும் தேவை. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட கால இடைவேளியில் முழு உடல் பரிசோதனை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வைட்டமின்கள் பரிசோதனை, மற்றும் எலும்பு பரிசோதனைகளும் இருத்தல் நலம். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை தானாகவே நமக்கு வரும், அதை கவனித்து அதன்படி செயல்பட கற்றுக்கொள்ளலாம். தம்பதியர்களும் கூட உடல் சார்ந்த இணைப்பு குறைந்து உணர்வு சார்ந்த பிணைப்பு அதிகரித்திருப்பதை கவனித்து அதற்கான நேரம் ஒதுக்கி உறவையும், குடும்ப பந்தத்தையும் கூட வலிமையாக்கலாம். ‘’ Accept Everything “ நம்மைச் சுற்றி நடக்கும் நேர்மறை செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதுதான் வயதான பயம் அகல ஒரே வழி. தோற்றம் குறித்த மற்றவர்கள் கமெண்ட்களை பெரிதாக்கிக் கொள்ளாமல் , நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம், எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் அவசியம். நம்மை நாம் கொண்டாடினாலே 40 என்ன 60, 80களைக் கூட ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் கடந்து செல்லலாம்’’ உற்சாகமாக சொல்கிறார் டாக்டர் எஸ். வந்தனா.
- ஷாலினி நியூட்டன்.
