Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதகமா? பாதகமா?

ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பிறகு தேர்தல் நடைமுறையில் அறிவியல் பூர்வமான ஊழல் நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை பதிவு செய்து வருகிறது. வாக்கு இயந்திர தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை இல்லை என்றும் வலியுறுத்தியது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை திருப்திப்படுத்த வாக்கு இயந்திரங்கள் நம்பகமானவை என்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தி திருப்திப்படுத்தி வந்தது.

ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களில் மக்கள் அந்த ஆட்சிக்கு எதிரானவர்களாக இருந்தும் தேர்தலில் பாஜ வெற்றி பெறுவது எப்படி என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கும் எழுந்தது. மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவி வந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வேறாக அமைந்தது. மேலும் பாஜ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் சொற்ப வாக்குவித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்கள்.  இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாக்காளர் பட்டியலை அலசி ஆராய்ந்தார்.

அப்போது தான் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் இருப்பதை கண்டுபிடித்தார். கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் ஆலந்து தொகுதி மட்டுமின்றி பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பாஜ வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். எனவே வாக்கு இயந்திர தேர்தல் நடைமுறையை ஒழித்து மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் பாஜவுக்கு திருடனுக்கு தேள் கொட்டியது ேபால் ஆனது. வாக்கு இயந்திர தேர்தல் நடைமுறை எந்த தவறும் இல்லாமல் நடக்கிறது.

சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்றிய அரசு தலையிடுவதில்லை என்று விளக்கமளித்தது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் திருத்த பட்டியல் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியது. இதற்கும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, பெருநகர பெங்களூரு மாநகராட்சியை கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சியாக ஐந்தாக பிரித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த மாநகராட்சிகளுக்கு இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி வாக்கு இயந்திர தேர்தல் நடைமுறைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதால், மாநகராட்சி தேர்தலை வாக்குசீட்டு நடைமுறையில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதை முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றுள்ளனர். அதே சமயம் மாநகராட்சி தேர்தலில் பாஜ மகத்தான வெற்றி பெற்றால் வாக்கு இயந்திர தேர்தல் முறையில் ஊழல் நடப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பேசக்கூடாது. இதை பரிசோதித்து பார்க்கவே வாக்குசீட்டு தேர்தல் நடைமுறை மாநகராட்சி தேர்தலி்ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜ தலைவர்கள் கூறுகிறார்கள். எனவே வாக்குச்சீட்டு தேர்தல் நடைமுறை சாதகமா, பாதகமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.