Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘மாமனார், மாமியாரை மதியுங்கள்’ என அறிவுரை ஊருக்கு மட்டும் உபதேசம்... வீட்டுக்கு கிடையாதா? சவுமியாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விழுப்புரம்: திருமணம் ஆகும் பெண்கள் மாமனார், மாமியாரை மதித்து நடக்க வேண்டும் என்று பாமகவின் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி திருமண விழாவில் பேசிய பேச்சுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் பதில் அளித்து டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். ஊருக்கு உபதேசம் கூறும் சவுமியா இதை தனது வீட்டிலும் கடைபிடிக்கலாமே என்று சகட்டுமேனிக்கு விளாசி வருகின்றனர்.

பாமகவில் தந்தை, மகன் இடையே தலைவர் பதவிக்கான அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணியை தொடர்ந்து மருமகள் சவுமியா மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று தனது ஒரு காலை பிடித்து கெஞ்சினார் சவுமியா என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

தனது குடும்பத்திலிருந்து பெண்கள் யாரும் அரசியலுக்கு செல்லக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டை மீறி கடந்த மக்களைவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட கெஞ்சி, கூத்தாடி அனுமதி பெற்றார். இதனால் தந்தை, மகன் மோதல் மட்டுமின்றி மருமகள், மாமனார் மோதலும் குடும்பத்தில் ஏற்பட்டது. இதன் எதிரொலியாகத்தான் அண்மையில் ராமதாசின் 60வது ஆண்டு திருமண நாள் நிகழ்ச்சிக்கு கூட சவுமியா அன்புமணி குடும்பத்தினர் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் பசுமைத் தாயாகம் தலைவரான சவுமியா அன்புமணி நேற்றுமுன்தினம் கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் நடந்த பாமக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அப்போதுபேசிய அவர், இரண்டு குடும்பங்கள் இணையும் விழா என்றாலே அது மகிழ்ச்சியான விழாதான். மணமக்கள் நிறைய படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய விஷயம் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் திருமண விழா என்றால் அதில் ஒரு சில அட்வைஸ் சொல்லுவார்கள்.

எல்லோரும் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயத்தை தான் சொல்லப் போகிறேன். மருத்துவர் அன்புமணி அவர்களும், நானும் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்றால் முதலில் என்னுடைய மாமனார், மாமியாரை தான் முதலில் கவனிப்போம். அவர்களை கவனித்து மரியாதை செய்தாலே குடும்பம் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடும். இதனை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தாய், தந்தையையும் மதித்து வாழ வேண்டுமென கூறினார்.

சவுமியா அன்புமணி பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆகி உள்ளது. நேற்று முன்தினம் கூட திண்டிவனத்தை கடந்து வந்த சவுமியா தனது மாமனார் ராமதாசை வீட்டிற்கு சென்று சந்திக்கவில்லை. இது சம்பந்தமாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் பதில் அளிக்காமல் ஓட்டம் பிடித்தார்.

குடும்பத்தில் நடக்கும் மோதலுக்கு சவுமியாவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணவிழாவில் அவர் அளித்த உபதேசம் ஊருக்கு மட்டும் தானா வீட்டிற்கு இல்லையா? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

* பாமக தொண்டரின் ராமதாஸ் பாட்டு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெற்றி மாங்கனி இசைக்குழு நடத்தி வருபவர் கவிஞர் செஞ்சி சின்னசாமி. ராமதாஸ் மீது அளவுகடந்த மரியாதை வைத்துள்ள இவர் பாமகவில் கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தைலாபுரம் தோட்டத்தின் நுழைவாயிலில் பாமக கட்சி புகைப்படம், கொடிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் இவர், அவ்வப்போது அங்கு நிர்வாகிகளை குஷிப்படுத்தும் வகையில் பாடல்களை பாடி வருகிறார்.

தற்போது பாமக அரசியல் நிலவரம் குறித்து அவர், ஒதுங்கி இருந்த கூட்டம்,,, இப்போ வருது பாரு மாற்றம். இது வெற்றிக்கொடியை நாட்டும்... அய்யா ேபாடும் வெற்றி கணக்கு புரியலையா உங்களுக்கு என்று பாடிய பாடல் சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

* அன்புமணி குற்றச்சாட்டு ராமதாஸ் இன்று பதிலடியா?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று (29ம்தேதி) பாமக சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நேற்று அன்புமணி தலைமையில் சமூக ஊடக பேரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் மீது அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைலாபுரத்தில் இன்று சமூக ஊடக கூட்டத்தை ராமதாஸ் கூட்டியுள்ளார். சமூக ஊடகப் பேரவை தலைவர் தொண்டி ஆனந்தன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு உண்மைகளை ராமதாஸ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.