பு ற்றுநோயால் தந்தையை இழந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோனல் கோயல், புற்றுநோய் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார்.
2008-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த சோனல் கோயல், தற்போது டெல்லியில் உள்ள திரிபுரா பவனில் குடியிருப்பு ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புற்றுநோயால் தனது தந்தையை இழந்தார். இந்த இழப்பு அவரை மிகவும் பாதித்தது. அதன்பிறகு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்காக, தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையில் மலையேற்றம் மேற்கொண்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தின் முடிவில், கடல் மட்டத்திலிருந்து 18,885 அடி உயரத்தில் உள்ள ஸ்டெல்லா பாயிண்ட்டை அடைந்தார். அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றியதுடன், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காட்சிப்படுத்தினார்.
இதற்கு முன்பு எவரெஸ்ட் அடிவார முகாமுக்கும் மலையேற்றம் மேற்கொண்ட அவர், அங்கும் விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்பியுள்ளார்.
தனது தந்தையின் இழப்பை நினைத்து முடங்கிவிடாமல், அதனைப் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக மாற்றியுள்ளார் சோனல் கோயல். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தையும், தைப்பொருளைத் தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.


