திருப்பதிசாரம்! பயணத்திற்கு உகந்த பாரம்பரிய ரகம்
டெல்டா பாசனத்துக்கு ஏற்ற மிகச் சிறப்பான ரகம் இது. திருச்சி போன்ற சில பகுதிகளில் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றது. சுமார் நான்கு அடி உயரம் வரை வளரும் தன்மைகொண்ட திருப்பதி சாரம் தோராயமாக 140 நாட்களில் அறுவடைக்குத் தயாராகக்கூடியது. ஒரு ஏக்கருக்கு பயிரிட 40 மூட்டை விதை நெல் வரை தேவைப்படும். அறுவடையின்போது குறைந்தது ஏக்கருக்கு 25 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். வளமான நிலம் என்றால் அமோக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய நெல்ரகம் இது. ஒரு ஏக்கரில் பயிரிட சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதுபோலவே, ஒற்றை நாற்று முறைக்கு வயலைப் பண்படுத்த கோடை உழவு போல இரண்டு முறை நன்கு உழ வேண்டியது அவசியம். பிறகு, பசுந்தாள் உரம் அல்லது நன்கு மட்கிய தொழு உரம் போட வேண்டும். பசுந்தாள் உரத்துக்கு தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு, அகத்தி ஆகியவற்றை ஏக்கருக்கு 15 கிலோ விதை தூவிய பிறகு தண்ணீர் விட வேண்டும். இது 25 நாட்களுக்குள் பூத்துவிடும். பிறகு நன்கு மடக்கி உழுதால் பசுந்தாள் உரம் மட்கிவிடும். பிறகு, நடும் முன்பு ஒருமுறை மறு உழவு ஓட்டிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
நடும்போது ஏக்கருக்கு 50 கிலோ கடலைப் புண்ணாக்கு மற்றும் 30 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 15 நாளில் இரண்டாவது மேலுரம் போட வேண்டும். தொடர்ந்து 30வது நாளிலும் மேலுரம் போட வேண்டும். நடவு செய்த 25ம் நாள் முதல் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் ஜீவாமிர்தம் மற்றும் பஞ்சகவ்யத்தையும் மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். கால்நடைகள் சாப்பிடாத எருக்கு, பிரண்டை, வேப்பம் விதை ஆகியவற்றை ஒரு ஏக்கருக்குத் தலா ஒரு கிலோ என எடுத்துக்கொண்டு நன்கு இடித்த பிறகு, இந்தக் கலவையை இரண்டு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் போட்டு ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். இந்தக் கலவை நன்கு நொதித்ததும் நீரை வடிகட்டினால் இயற்கையான பூச்சிகொல்லி தயார். இதை நீரில் கலந்து தெளிக்கலாம். நாற்று நட்ட 15வது நாள் ஒருமுறையும் முப்பத்தைந்தாவது நாள் ஒருமுறையும் களையெடுப்பு செய்வது நல்லது. நடவு முடிந்த 20ம் நாளில் தொழுவுரம் இட வேண்டும். 25ம் நாளில் களை எடுக்க வேண்டும். 90ம் நாளில் கதிர் பிடிக்கத் தொடங்கும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (7 நாட்கள் புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்த ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 120ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 140ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, அறுவடை செய்யலாம். அறுவடையில் முன்னர் சொன்னது போல் 25 மூட்டை நெல்லை மணி மணியாக மகசூல் பார்க்கலாம்.