Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காய்கறிகள் முதல் மரங்கள் வரை...5 ஏக்கரில் ஆர்கானிக் விவசாயம்!

மூன்று தலைமுறைக்கு முன்பு எங்கள் நிலமெங்கும் சிறுதானிய சாகுபடிதான். தாத்தா, அப்பா காலத்தில் காய்கறிகளைப் பயிரிடத் தொடங்கினார்கள். அதுவும் கூட ரசாயனப் பயன்பாட்டில்தான் நடக்கும். இப்போதும்கூட எங்கள் பகுதியில் ரசாயன உரத்தைத்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். நானும் கூட ஒரு காலத்தில் அந்த முறையில்தான் விவசாயம் செய்தேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. முழுக்கவே இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன்’’ என தனது விவசாய பயணத்தைப் பற்றிய நினைவுகூரலோடு பேச ஆரம்பித்தார் பழனிமுருகன். சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு விதமான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். இந்தக் காய்கறிகளின் மூலம் கணிசமான லாபமும் பார்த்து வருகிறார். சேலத்தில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ள அவரது கிராமத்திற்கு ஒரு காலைப்பொழுதில் சென்றிருந்தோம். அந்தப் பகுதியில் பெரும்பாலும் தோட்டத்து வீடுகள்தான். வீடு, வீட்டைச் சுற்றி விவசாயம் என கிராமம் முழுவதுமே விவசாயம் செழித்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான வயல்களில் ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயம் செய்யும் பழனிமுருகனின் வயல் அங்கு தனித்துத் தெரிகிறது. தனது வயலைச் சுற்றிக் காண்பித்தவாறே தனது விவசாய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

`சிறுவயதில் இருந்தே விவசாயம்தான் எங்களுக்குத் தொழில். தாத்தா, அப்பாவுக்கு துணையாக விவசாய வேலை செய்வது அப்போது பிடித்திருந்தது. ஏர் ஓட்டுவது, கழனியில் நீர் இறைப்பது என அப்போதே அனைத்து வேலைகளும் எனக்கு அத்துப்படி. எட்டாவது வரை பள்ளிக்கூடம் சென்றேன். அதன்பின், அப்பாவுக்குத் துணையாக முழுமையான விவசாய வேலையை செய்யத் தொடங்கினேன். அப்பா பத்து ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவர் காலத்துக்குப் பிறகு, அதே நிலத்தில் நானும் தம்பியும் விவசாயம் செய்து வருகிறோம். 1999க்குப் பிறகு நான் தனியாக விவசாயம் செய்யத் தொடங்கினேன். இப்போது ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். ஒரு ஏக்கரில் நாட்டுக் கத்தரி, ஒரு ஏக்கரில் அவரை, ஒரு ஏக்கரில் தென்னை, ஒரு ஏக்கரில் வாழை, அரை ஏக்கரில் மா, கொய்யா, அரை ஏக்கரில் மாட்டுத் தீவனத்திற்காக புல் என ஐந்து ஏக்கரிலும் வருடம் முழுவதும் விவசாயம் நடந்தபடி இருக்கும். எஞ்சியுள்ள இடத்தில் பூசணிக்காய் சாகுபடி செய்து வருகிறேன். இப்போது கத்தரி இருக்கும் இடத்தில், கடந்த முறை அவரை போட்டிருந்தேன். வெண்டைக்காய் விதைத்த இடத்தில் இப்போது அவரைப் போட்டிருக்கிறேன். இப்படி, ஒரே நிலத்தில் பட்டத்திற்கேற்ப மாற்றி மாற்றி காய்கறிகள் பயிரிடுகிறேன். இந்த முறையில் விவசாயம் செய்வதால், வருடம் முழுவதும் ஏதாவது ஒரு காய்கறி எனது நிலத்தில் விளைச்சல் கொடுத்தபடி இருக்கும்.

ஆரம்பத்தில் நானுமே கூட ரசாயன உரம் பயன்படுத்திதான் விவசாயம் செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் ரசாயனத்தை நிறுத்தலாமென முடிவெடுத்தேன். ஏனென்றால், ரசாயன உரம் பயன்படுத்துவதால் தொடர்ந்து செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து அடிப்பது விளைச்சல் பொருளிலும் நோயைக் கொண்டுவரும் என உணர்ந்தேன். அதேபோல, ரசாயன உரங்களின் விலை அதிகமாக இருந்ததால் அதைப் பயன்படுத்த வேண்டாமென முடிவெடுத்தேன். அதற்கு மாற்றாக, மாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கலாமென முடிவெடுத்தேன். அதனால், இயற்கை உரம் எப்படித் தயாரிக்கலாமென பயிற்சிகளை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு திரும்பி, தற்போது முழுமையாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.இயற்கை விவசாயத்திற்கு வந்த புதிதில் மகசூல் மிகமிக குறைவாகக் கிடைத்தது. முதல் நான்கு வருடங்கள் இதே நிலைதான். செலவு செய்த காசு கூட கிடைக்காமல் இருந்தது. அந்தளவிற்கு மண் ரசாயன உரங்களுக்கு பழக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நான்கு வருடங்கள் எனது நிலத்தில் இருந்து எந்த வருமானமும் இல்லை. ஆனால், நான் பின்வாங்கவில்லை. மண்ணை இயற்கை விவசாயத்திற்கு பழக்கப்படுத்துவதில் தீவிரமாக இருந்தேன். தொழு உரம், மண்புழு உரம், இயற்கைக் கரைசல்களை மட்டுமே கொடுத்து வந்தேன். சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நிலம் முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறியது. செடிகள் எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் வளரத் தொடங்கியது. விளைச்சல் பெருகத் தொடங்கியது. சரியான, நிலையான மகசூல் கிடைக்க ஆரம்பித்தது. அன்றில் இருந்து இன்று வரை நல்ல மகசூல் கிடைக்கிறது. நானும் தொடர்ந்து இயற்கை முறை விவசாயம்தான் செய்து வருகிறேன்.

எனது தோட்டத்தில் விளையும் காய்கறிகள் அனைத்தையும் எங்கள் பகுதியில் உள்ள உழவர் சந்தையில்தான் விற்பனை செய்கிறேன். மாலை அறுவடை செய்யப்படும் காய்கறிகளை அடுத்தநாள் காலை நான்கு மணிக்கு சந்தைக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்வேன். கத்தரி, அவரை, பூசணி என ஒரு நாளைக்கு 150 கிலோ காய் கறிகள் எனது தோட்டத்தில் இருந்து விற்பனைக்காக வெளியேறுகின்றன. அதுபோக, தேங்காய், வாழை, மா, கொய்யாவையும் விற்பனைக்கு எடுத்துச் செல்கிறேன்.இப்போது காய்கறிகள் நல்ல விலைக்குப் போகிறது. சில நேரம் கிலோ 10க்கு கூட விற்பனை ஆகும். அப்போதும் இதை விற்பனை செய்ய தவறியதில்லை. தோட்ட வேலைகளுக்கும், காய்கறிகளை அறுவடை செய்வதற்கும் ஆட்கள் வருவார்கள். அதுபோக, களை பறிப்பதற்கு ஆட்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு கொடுக்கக்கூடிய சம்பளம்தான் மிகப்பெரிய செலவு. அதுபோக, காய்கறி சாகுபடிக்கு ஆகும் செலவும் இருக்கிறது. அதேபோல, ஒரு நாளைக்கு சந்தைக்கு எடுத்துச் செல்லப்படும் விளை பொருட்களில் இருந்து, விலையைப் பொறுத்து சராசரியாக 2 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் வரை கிடைக்கும். செலவெல்லாம் போக இப்போது நல்ல லாபம் வருகிறது. ஆனால், உரத்திற்கென்று நான் எதுவும் செலவு செய்வது கிடையாது. ரசாயன உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது அடி உரம், பூச்சி விரட்டி, பூச்சிக்கொல்லி, வளர்ச்சியூக்கி என செடியின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு உரம் தேவைப்படும். அவை அனைத்தையும் இப்போது இயற்கை முறையில் தயாரிப்பதால் செலவு குறைவதோடு, பயிர்களும் செழிப்பாக வளர்கின்றன.

எல்லா பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசன முறையில்தான் நீர் பாய்ச்சு கிறேன். மண்புழு உரத்தை நானே தயாரிக்கிறேன். மண் பாதுகாப்பு, செடி பாதுகாப்பு என அனைத்தையும் நானே கவனித்துக் கொள்கிறேன். இப்படி, இயற்கை முறை சாகுபடிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நானே செய்கிறேன். எனக்குத் தெரியாத விசயங்களை அக்ரி அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன்’’ என மகிழ்வோடு பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

பழனிமுருகன்: 99651 35751.

காய்கறி சாகுபடி போக 10 மாடுகள் வளர்த்து பால் விற்பனையும் செய்து வருகிறார் பழனிமுருகன். ஒருநாளைக்கு 10ல் இருந்து 15 லிட்டர் பாலை விற்பனை செய்து கூடுதல் வருமானமும் பார்க்கிறார். அதேபோல, மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியத்தை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்.