வேளாண் தொழிலில் அறிமுகமான சில புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் கைகொடுத்து வருகின்றன. முக்கியமாக செலவைக் குறைத்து வருமானத்தைப் பெருக்க அத்தகைய தொழில்நுட்பங்கள் மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றன. அந்த வகையில் நீர் மேலாண்மைக்கு கைகொடுக்கும் சொட்டுநீர்ப்பாசனம் குறித்தும், அதனைப் பயன்படுத்தி பலன்பெறும் தஞ்சை மாவட்டம் தோழகிரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயியின் அனுபவம் குறித்தும் கடந்த இதழில் கண்டோம். சொட்டுநீர்ப்பாசனத்தின் நன்மைகள் குறித்து கோவிந்தராஜ் அளித்த பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது.
சாதாரண நெல் பயிர் சாகுபடியில் உரம், பூச்சி மருந்துகள் தெளிக்கும்போது வயல் முழுவதும் தண்ணீர் இருக்க வேண்டும். இந்த முறையில் தெளிக்கப்பட்ட மருந்து நீரில் கரைந்த பின்னர்தான் பயிர்களுக்கு செல்லும். ஆனால் சொட்டுநீர்ப் பாசனத்தில் மருந்துகளை பாசன நீருடனே கலந்து அனுப்புவதால் நேரடியாக பயிர்களின் வேரில் சென்றடைகிறது. இதனால் பயிர் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். முன்பு களை பறிக்க ஆட்கள் கூலி ரூ.250 முதல் 300 ரூபாய் வரை இருந்தது. இப்போது நாமே எளிதாக சொட்டுநீர்ப் பாசனத்தில் களை பறித்து விடலாம். இப்படி அனைத்து விதத்திலும் சொட்டுநீர்ப் பாசனத்தில் செலவுகள் குறைவுதான். தினமும் தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. தேவைப்படும் சமயங்களில் மட்டும் பாசனம் செய்தால் போதும். அதுவும் ஒரு சில மணி நேரங்கள் பாய்ச்சினால் போதும்.
சொட்டுநீர்ப் பாசனம் செய்கையில் வயலில் களைகள் அதிகம் மண்டுவதில்லை. சாதாரண நெல் சாகுபடியில் ஏக்கருக்கு உழவு ஓட்டுதல், நாற்று விடுதல், நாற்றுகளைப் பறித்து நடவு செய்தல், களை எடுத்தல், உரம் தெளித்தல், அறுவடை என பல்வேறு பணிகளுக்காக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் சொட்டுநீர்ப் பாசனத்தில் ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலவு ஆகும். அதில் 30 மூட்டை மகசூல் கிடைத்து, ரூ.75 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். சொட்டுநீர்ப் பாசனம் செய்கையில் ஏக்கருக்கு 40 மூட்டை விளைச்சல் கிடைத்து, ரூ.1 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் ஒரு சாகுபடி காலத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. இந்த சொட்டுநீர் பாசனம் நிச்சயமாக ஒரு வரப்பிரசாதம்தான். நெல்லுக்கு மட்டுமின்றி காய்கறிகள், ஆலைக்கரும்பு போன்றவற்றுக்கும் அருமையான முறையாக சொட்டுநீர்ப் பாசனம் அமைகிறது.
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு சிறுகுறு விவசாயிகளுக்கு முழு மானியம் அளிக்கிறது. இதில் பைப்
1.5 இன்ச் என்பதை 2 இன்சாக நாங்கள் கூடுதல் பணம் கொடுத்து அமைத்துக் கொள்கிறோம். அதுவும் ஒரு முறைதான். 2 இன்ச் பைப் என்பதால் தண்ணீர் சற்று விரைவாக பாயும். இதனால் பாசன நேரம் 6 மணி நேரம் என்பது 4 மணி நேரமாக குறைந்து விடும். இந்த சொட்டு நீர்ப் பாசனத்தில் உள்ள ஒரே பிரச்சினை தண்ணீர் செல்லும் குழாய்களை அணில்கள், எலிகள் கடித்து விடுவதுதான். இதனால் தண்ணீர் சரிசமமாக பாய முடியாத நிலை உள்ளது. இதை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். அரசு இந்த சொட்டுநீர்க் குழாய்களை 7 ஆண்டுகள் கழித்துதான் மாற்றித் தருகிறது. இதை 3 அல்லது 4 ஆண்டுகளில் மாற்றித் தந்தால் விவசாயிகளுக்கு மேலும் பலன் கிடைக்கும். தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக சொட்டு நீர் பாசனத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். இதில் அதிக வருமானம் எடுத்திருக்கிறேன். சொட்டுநீரில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம் என்பதற்கு ஏறக்குறைய வாய்ப்பே இல்லை. நாம் முறையாக கவனத்துடன் பராமரிப்பதை உறுதி செய்தால் போதும். இதை வைத்து பார்க்கும்போது சொட்டுநீர்ப் பாசனம் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்தான் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். இதை டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டால் தண்ணீர் தேவை மிக, மிக, குறைந்து விடும். வேளாண்மை துறையினர் இதுகுறித்து கவனம் செலுத்தினால் இன்னும் நெல் சாகுபடியில் கூடுதல் அறுவடை செய்யலாம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
கோவிந்தராஜ்: 97881 88858.
மானியம்
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க அரசு சார்பில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சிறு,குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க முன்பெல்லாம் சாகுபடி பரப்புக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கு 100 சதவீத பரப்பிலும் சொட்டுநீர்ப் பாசனத்திற்காக மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
