Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் மல்லி... விற்பனையில் கில்லி!

மல்லிகையே மல்லிகையே,

மல்லியே சின்ன மல்லியே,

மல்லிகைப்பூவுக்கு கல்யாணம்...

இதுபோன்ற பல திரைப்படப் பாடல்கள் மல்லிகைப்பூவைக் குறிப்பிட்டு வந்திருக்கின்றன. அதேபோல பல காதல் கவிதைகளும், காதல் கதைகளும் மல்லிகையை மையமாக வைத்தே புனையப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மல்லி என்றால் அழகு, அழகு என்றால் மல்லி என்ற கருத்தாக்கம்தான் காரணம். இன்றும் பூக்கடைகளில் மல்லிக்குத்தான் நம்பர் 1 இடம். அதன் மயக்கும் மணம், தூய வெள்ளை நிறம் போன்ற அம்சங்கள் பெண்களை வெகுவாக ஈர்த்து விடுகின்றன. இத்தகைய அழகிய மலரான மல்லிகையை சாகுபடி செய்து அற்புதமான லாபம் ஈட்டும் விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல். ஒரு காலைப்பொழுதில் சக்திவேலின் மல்லிகைத் தோட்டத்திற்கு சென்றோம். நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

``எங்கள் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மல்லிகை சாகுபடிக்கு தோதாக இருக்கும். இதனால் எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்திருக்கிறேன். மல்லிகை நாற்றுகளை நடவு செய்ய முதலில் நிலத்தை மூன்று முறை நன்றாக உழவு ஓட்டி, ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன்கள் வரை தொழுஉரம் இட்டு தயார்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து நான்கு அடிக்கு நான்கு அடி இடைவெளி விட்டு மல்லிகை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பொதுவாக இப்பகுதியில் நடவு செய்யப்படும் மல்லிகை நாற்றுகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் இருந்து வாங்கி வந்து நடவு செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரம் மல்லிகை நாற்றுகள் தேவைப்படும். நடவு செய்து ஆறு மாதங்களில் பூ பூக்கத் தொடங்கும். 24 மாதங்கள் கழித்து முழுமையான மகசூல் கிடைக்கும். மல்லிகைச் செடியினை நல்ல முறையில் பராமரித்தால் ஒரு முறை நடவு செய்யப்படும் செடிகளில் இருந்து 15 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கும். சொட்டுநீர் பாசன முறையில் நீர்ப் பாசனம் செய்து வருகிறேன். மருந்து தெளித்தல், களை வெட்டுதல், கவாத்து செய்தல், ரசாயன உரம் இடுதல், தொழுஉரம் இடுதல், பூப்பறிக்கும் கூலி என ஒரு வருடத்தில் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு வருடத்தில் கிடைக்கும் பூக்களை விற்பனை செய்கையில் ரூ.7 வரை வருமானம் கிடைக்கிறது. இதில் செலவினம் 4 லட்சம் போக மீதி 3 லட்ச ரூபாய் நிகர லாபமாக கிடைக்கிறது.

இங்கு பறிக்கப்படும் மல்லிகைப் பூக்களை சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறேன். அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதால் என்னைப் போன்ற மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்கிறது. இங்கு விளையும் பூக்கள் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர், சிமோகா, தும்கூர், மாண்டியா, கொள்ளேகால், குண்டல்பேட், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரள மாநிலம் பாலக்காடு, எர்ணாகுளம், கொச்சின், திருச்சூர், கோழிக்கோடு நகரங்களுக்கும், ஹைதராபாத், மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும், சார்ஜா, அமெரிக்கா, அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம், ஊட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது’’ எனக்கூறும் சக்திவேல், `` ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மல்லிகை பூக்கள் மகசூல் அதிகரித்து பூக்கள் வரத்து வரும்போது விலை கடுமையான வீழ்ச்சியை அடைகிறது. அதுபோன்ற சமயங்களில் உற்பத்தியாகும் அதிகப்படியான பூக்களை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து நறுமணம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் கோரிக்கை வைக்கிறார்.

தொடர்புக்கு: சக்திவேல் - 97870 91909.

மல்லிக்கு மதுரை என்பது போல, ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலமும் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகைப்பூவுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நல்ல தட்பவெப்ப நிலை நிலவுவதால் மல்லிகைப் பூ சாகுபடிக்கு தோதாக இருக்கிறது. பூக்களும் தரமானதாக இருக்கிறது. இதனால் சத்தியமங்கலத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூவினை வாங்கி விற்பனை செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்