Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலையடிவார அழகிய கிராமத்தில் மகசூல் குவிக்கும் புடலைத்தோட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் தேக்கமலை, கன்னிமார் கரடு என சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, அந்த மலைகளின் அடிவாரத்தில் அழகுற அமைந்திருக்கும் கிராமம் தட்டாரப்பட்டி. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வையம்பட்டியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்தால் இந்த ஊரை அடைந்து மலைகளின் அழகை தரிசித்து விட்டு வரலாம். இந்த அழகிய ஊரில் மூங்கில் கம்பு, கம்பி போன்ற சாதாரண பொருட்களைக் கொண்டு பந்தல் அமைத்து தொடர்ச்சியாக புடலங்காய் சாகுபடி செய்து அசத்தலான மகசூல் அள்ளி வருகிறார் சுப்புராமன் என்ற விவசாயி. மலைக்குச் செல்லும் சாலையோரத்தில் வீடு, வயல் என அருகருகே அமைந்திருப்பதால் கண்ணும் கருத்துமாக விவசாயத்தைக் கவனித்து வருகிறார். மலைச்சாலையில் பயணித்து சுப்புராமனின் வயலை அடைந்து அவரை பேட்டி கண்டோம்...`இங்கு எங்களுக்கு 7 ஏக்கர் நிலம் இருக்கிறது. 2 ஏக்கரில் தென்னை வைத்திருக்கிறோம். 4 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கிறேன். முக்கால் ஏக்கரில் பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்கிறேன். நல்ல விளைச்சல் கிடைக்கிறது. கையைக் கடிக்காத அளவுக்கு விலையும் கிடைக்கிறது. இதனால் தொடர்ந்து இதை சாகுபடி செய்கிறேன்’’ என பேசத் தொடங்கியவர், புடலை சாகுபடி விபரங்களை அடுக்க ஆரம்பித்தார்.

`` எளிதாக கிடைப்பதால் மூங்கில் பந்தலைத்தான் அமைப்பேன். ஒருமுறை பந்தல் போட்டால் மூன்று, நான்கு வருடங்களுக்கு வரும். தற்போது பந்தலில் இருக்கும் பயிரை கடந்த ஆனி மாதத்தில் சாகுபடி செய்யத் தொடங்கினேன். அதாவது ஆனி மாத கடைசியில் உழவை ஆரம்பித்தேன். பந்தல் இருப்பதால் மினி டிராக்டரில் 3 முறை உழவு செய்தேன். இதற்கு பவர் வீடரை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். உழுதபிறகு கரை எடுப்போம். அதாவது 10 அடிக்கு ஒரு வாய்க்கால் என அமைப்போம். வாய்க்காலின் இருபுறமும் 3 அடிக்கு ஒன்று புடலை விதைகளை நடுவோம். மூன்று முறை உழுதிருப்பதால் மண் நன்றாக பொலபொலப்பாக இருக்கும். அதில் கையால் சிறிய அளவில் குழியெடுத்து விதைகளை ஊன்றுவோம். கடந்த முறை தொழுவுரம் போட்டதால் இம்முறை  போடவில்லை. புடலைக்கு வெயில் காலமாக இருந்தால் 3 நாளுக்கு ஒரு பாசனம் செய்தால் போதும். மழைக்காலம் என்றால் பாசனம் தேவையில்லை. நான் மழை வரும் மாதமான ஆடி மாதத்தில் சாகுபடி நடந்ததால் அதிகளவு பாசனம் செய்யவில்லை. நட்டதில் இருந்து 10-15வது நாளில் களைக்கொத்து வைத்து களையெடுப்போம். களையெடுத்த பின்பு ஒரு மூட்டை காம்பளக்ஸ் உரத்தை செடிக்கு அருகில் அரை அடி தள்ளி வைப்போம். 25வது நாளில் செடிகளில் இருந்து துளிர்கள் நன்றாக வளர்ந்திருக்கும். அந்த சமயத்தில் துளிரை, அதாவது கொடியை ஒரு மெல்லிய சணலில் கட்டி பந்தலில் உள்ள கம்பியில் இணைத்துக் கட்டுவோம். பந்தலில் 10 அடிக்கு ஒரு மூங்கில் குச்சி இருக்கும். அவற்றுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் கம்பியில்தான் கொடியை ஏறிப் படரச் செய்வோம். செடியில் இருந்து வரும் பிரதான துளிரைத்தான் மேலே ஏற்றுவோம். பக்கத்தில் வரும் தளிர்களை கிள்ளிவிடுவோம். இந்தக்கொடிகளும் வளர்ந்து பந்தலைத் தொட்டு விட்டால் தாய்க்கொடி பலவீனமாகிவிடும். தாய்க்கொடிதான் மகசூலை நன்றாக தரும். எனவே அதைத்தவிர மற்றக்கொடிகளை கிள்ளிவிடுவது நல்லது. கொடி கட்டும்போது ஒரு களையெடுத்து ஒரு மூட்டை டிஏபியை இடுவோம்.

செடியின் வளர்ச்சியைப் பொருத்து உரம், மருந்துகளை முறையாக வழங்க வேண்டும். வெயில் இல்லாமல் மழையாக இருந்தால் கொடி வேகமாக படரும். வெயில் நிலவினால் கொடிகள் மெதுவாகத்தான் படரும். எனவே மழைக்காலங்களில் கொடிகள் படர்வது போல் நாம் சாகுபடி முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். புடலையில் ஒருவித குளவிகளின் தாக்குதல் இருக்கும். இந்தக் குளவிகள் தாக்கினால் பிஞ்சுகள் அழுகத்தொடங்கும். காய்கள் பெருத்தாலும் பலன் இருக்காது. இதில் காய்ப்புழு தாக்குதலும் இருக்கும். இந்தப் பிரச்னைகளில் இருந்து பயிரைக் காக்க மானோகுரோட்டபாஸ் மருந்தை வாங்கி தெளிப்போம். பூ மற்றும் பிஞ்சு வைக்கும் சமயங்களில் பயிரின் ஆரோக்கியத்திற்காக டானிக் வாங்கி தெளிப்போம். மேலும் பிஞ்சுகள் விடும் சமயத்தில் ஒரு களையெடுத்து பாக்டம்பாஸ் உரத்தை பாசன நீரில் கரைத்து விடுவோம். இந்த முறையில் செய்வதால் உரத்தின் சத்தை பயிரின் வேர்கள் உடனே எடுத்துக்கொள்ளும்.

இதுபோன்று முறையாக பராமரித்து வரும் பட்சத்தில் 70வது நாளில் பிஞ்சுகள் வைக்க ஆரம்பிக்கும். 80-90வது நாளில் இருந்து அறுவடையை ஆரம்பிக்கலாம். இதில் ஒருநாள் விட்டு ஒருநாள் என அறுவடைப் பணியை மேற்கொள்வோம். ஒரு அறுவடையில் 10லிருந்து 15 சாக்கு வரை மகசூல் கிடைக்கும். ஒரு சாக்கில் 40 முதல் 60 வரை காய்கள் பிடிக்கும். சராசரியாக 50 கிலோ காய்கள் பிடிக்கும். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கிலோ காய்கள் மகசூலாக கிடைக்கும். ஆரம்பத்தில் இதுபோல் அதிகளவுக்கு காய்கள் கிடைக்கும். பின்பு படிப்படியாக மகசூல் குறைய ஆரம்பிக்கும். காய் வைக்க ஆரம்பித்ததில் இருந்து 3 மாதங்களுக்கு அறுவடை எடுக்கலாம். இடையில் அவ்வப்போது உரம் போட்டு, மருந்தடித்தால் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அறுவடை செய்த காய்களை அருகில் உள்ள வையம்பட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். அங்கு கமிஷன் அடிப்படையில் நமது விளைச்சலை எடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு விலை இருக்கும். ஒரு கிலோ காய் ரூ.3ல் இருந்து ரூ.20 வரை விற்பனை ஆகும். சராசரியாக ரூ.10 விலை கிடைக்கும். இந்த முக்கால் ஏக்கரில் இருந்து மொத்தமாக ரூ.80 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இதில் உரம், மருந்து, களை, அறுவடை, வண்டி வாடகை என ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். அதுபோக ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கும். அறுவடை எல்லாம் முடிந்தபிறகு பந்தலைக் காய விட்டு அடுத்த சாகுபடியை ஆரம்பிப்போம். சில நேரங்களில் பாகற்காய், பீர்க்கன்காய் போடுவேன். ஆனால் இந்தப் பயிர்களில் வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும். அதனால் நான் புடலை சாகுபடியையே விரும்பி செய்வேன். அதேசமயம் போதிய காலம் இடைவெளி விட்டே சாகுபடி செய்ேவன். உறுதியான லாபம் கிடைக்கும்போது இந்த சாகுபடியை விட முடியுமா?’’ என்ற கேள்வியோடு நம்மைப் பார்த்து புன்னகைத்தார்.

தொடர்புக்கு:

சுப்புராமன்: 97867 60938.

2 ஏக்கரில் தென்னைமரங்களை வைத்திருக்கும் சுப்புராமன், அவற்றையும் முறையாக பராமரித்து வருகிறார். கஜா புயலின் காரணமாகவும், அவ்வப்போது ஏற்பட்ட வறட்சியின் காரணமாகவும் சில தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. இப்போது சுமார் 200 மரங்கள் வரை உள்ளன. இவற்றில் இருந்து 50 நாளுக்கு ஒரு அறுடை எடுக்கிறார். அதன்மூலம் ஒரு கணிசமான லாபத்தைப் பார்க்கிறார். நெல் சாகுபடியில் ஏக்கருக்கு சராசரியாக 20 மூட்டை (76 கிலோ எடை கொண்டவை) மகசூல் எடுக்கிறார். இதில் தமது குடும்பத்திற்கான தேவை போக விற்பனை செய்துவிடுகிறார்.