லாலாப்பேட்டையில் எள் விலை குறைவால் விவசாயிகள் கவலை
*மகசூல் குறைந்துள்ளதாக வேதனை
லாலாப்பேட்டை : லாலாப்பேட்டை பகுதிகளில் எள் விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்து மகசூல் குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.கரூர் மாவட்டம் லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பஞ்சப்பட்டி, பாப்பக்காப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, சுக்காம்பட்டி, வயலூர் வேங்காம்பட்டி, புனவாசிப்பட்டி பழைய ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி செய்திருந்தனர்.
மானாவாரி பயிரான எள் பயிரிட்டு நன்கு வளர்ந்து 100 நாட்களுக்கு பின்னர் அறுவடை செய்துஅறுவடை செய்து ஐந்து முதல் பத்து நாட்கள் வரை காய வைத்த பின்னர் விவசாயிகள் விதைகளை பிரித்து எடுத்து விற்பனை செய்பவர்.
ஒரு ஏக்கரில் 72 கிலோ அளவு கொண்ட மூட்டையில் இரண்டு மூட்டைகள் மகசூல் கிடைத்த நிலையில் தற்போது ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.
மேலும் எள் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் கிலோ ரூ.100 கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகள் கிலோவிற்கு ரூ.150 ரூபாய் விலை கூறும் நிலையில் வியாபாரிகள் அதற்கு முன் வரவில்லை. மேலும் கிலோ ரூ.150க்கு விற்றால்தான் தாங்கள் செய்த செலவினங்களுக்கு ஈடு செய்ய முடியும் என்றும் தற்போது விலை குறைவால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மகசூல் குறைவு மற்றும் எள் விலை குறைவினால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.