Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்த கிடை வைக்கும் விவசாயிகள்

* வயல்களில் மேய்ச்சலுக்கு விடுவதால் கால்நடைகளின் எரு உரமாகும்

தஞ்சாவூர் : தஞ்சை அருகே காவலூர் பகுதியில் சம்பா அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மாடுகளை கிடை வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய பூமியான தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிலும், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த விவசாயிகள் முன்வந்துள்ளனர். தற்போது சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இயற்கை உர பயன்பாட்டின் முன்ஏற்பாடாக அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இயற்கை உரத்துக்காக கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை.

அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனிதன் பல்வேறு நோய்தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இதனால் இயற்கை உரமிட்டு விவசாயம் செய்ய சில விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைநிலங்களில் ஆடுகள், மாடுகளை அடைத்து வைத்து கிடை வைப்பதன் மூலம் கால்நடைகளின் எரு விளைநிலங்களுக்கு சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

இதனால் சேலம் மாவட்டம் ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவலூர், பாபநாசம், இரும்புதலை, திருக்கருகாவூர், இடையிருப்பு, சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விளை நிலங்களில் காற்றாட விடப்பட்ட விவசாய நிலங்களில் பகலில் மேய்ச்சலில் ஈடுபடுத்துகின்றனர்.

இரவு நேரங்களில் விளைநிலங்களில் கிடைபோட்டு அதன் கழிவுகளை வைத்து இயற்கை உரமாக பயன்படு த்துகிறார்கள். இப்படி செய்வதால் மண்ணின் வளம் இயற்கையான முறையில் மேம்படுத்தப்படும்.

எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தால் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவர் என விவசாயிகள் கூறுகின்றனர்.

கிடை வைக்க கூலி

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கிடைவைக்கும் தொழிலாளி கூறும்பொது, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ங்களில் உள்ள கிராமங்களில் அறுவடை முடிந்த உடன் எங்கள் ஊர் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வருவோம். சுமார் 6 மாதம் வரை இங்கேயே தங்கியிருந்து மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம்.

பகலில் மாடுகளை மேய்ப்போம். இரவு வயல்களில் மாடுகளை தங்க (கிடை) வைப்போம். ஒரு இரவுக்கு கிடை வைக்க ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் அரிசியை கூலியாக பெறுவோம். ஆடுகளுக்கு ஒரு நாள் இரவு கிடை வைக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை வாங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.