Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தாததை கண்டித்து சாலைமறியல்

*போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வுகூட்டம் நடத்தாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத்துறை மாவட்ட முதல்நிலை அதிகாரிகள் பங்குபெறுவார்கள்.

விவசாய சங்கபிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து இக்கூட்டத்தில் உரிய தீர்வு காணப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர்களும் கூட்டத்திலேயே பதிலளிப்பார்கள். இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்வுகூட்டம், விவசாயிகள் குறைதீர்வுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் குறைதீர்வுகூட்டம் நடத்தப்படாததை கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் பெருந்திட்டவளாகம் எதிரே கலிவரதன் தலைமையில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கூட்டத்தை நடத்தக்கோரி கோஷமிட்டனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்துசெல்லாததால் ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்) மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜமாபந்தி நடைபெற்றுவருவதால் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்திற்கு மாற்றுதேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் என்று கூறியதன்பேரில் கலைந்துசென்றனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் விளக்கம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அளவில் ஜமாபந்தி நடைபெற்று வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர், சப்-கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், துணைஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. இதில் சம்மந்தப்பட்ட துறைஅதிகாரிகளும் பங்கேற்பார்கள்.

ஜமாபந்தியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதால் பொதுமக்கள் குறைதீர்வுகூட்டம், விவசாயிகள் கூட்டம் ரத்துசெய்யப்படும். இது இங்குமட்டுமல்ல. அனைத்து மாவட்டங்களிலும் இதேநிலைதான். அதற்கு பதிலாக வேறொரு நாளில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.