Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அறிவித்தபடி ஜூன் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த தவெக அரசு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை: கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தவெக அரசு அளித்துள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவித்தபடி வரும் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தவெக அரசு தற்பொழுது இரண்டாவது தடவையாக விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக தேர்தல் வாக்குறுதியாகச் சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதம் தள்ளுபடி என்று அறிவித்தது. 24.5.26 அன்று மாநில அரசு அறிவித்திருந்த கடன் தள்ளுபடி இதன், தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து கடந்த 26.5.26 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் கொந்தளித்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களும் வரும் ஜூன் 22 அன்று சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவியநிலையில் போராட்டம் நடத்திட அறிவிக்கப்பட்டு ஏற்பாடு நடந்து வருகிறது. இந்தச் சூழலில், மீண்டும் கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கான புதிய ஆணையை இந்த அரசு வெளியிட்டிருக்கிறது. அதாவது, ரூ.75 ஆயிரத்திற்கு கீழ் நிலுவையில் உள்ள கடன் முழு தள்ளுபடி, ரூ.75 ஆயிரத்திற்கு மேல் கடன் இருப்பவர்களுக்கு 35 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என அரசாணை வந்துள்ளது.

ஆனால், தேர்தல் வாக்குறுதிபடி 5 ஏக்கர் உள்ளவர் சிறு விவசாயி என்கிற முறையில் முழு கடன்தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதேபோல, இதர விவசாயிகளான ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் என்ற நிலையில் ஒருவர் 5.1 ஏக்கருக்கு கடன் பெற்று இருந்தால் அவர் 1.75 லட்சம் ரூபாய் கடன் பெற்று இருப்பார். ஆனால் இவருக்கு 35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி. எஞ்சிய கடன் தொகையை செலுத்த வேண்டும். தேர்தல் வாக்குப்படி இவர்களுக்கு 50 சதமான 87,500 ரூபாய் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். இதுவரை கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது நிலம் அளவீடைக் கொண்டு அறிவிக்கப்பட்டது. தற்பொழுது கடன் தொகையை அளவாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது தான் பிரச்னை.

முதல்வரையும், விவசாயிகளையும் ஏமாற்றத்தான் வங்கி உயர் அலுவலர்கள் உரிய துறை அமைச்சர்களோடு சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். ஆட்சியில் அமருவதற்காக ஆட்சியாளர்கள் கூறிய வாக்குறுதியைத்தான் விவசாயிகள் கோறுகிறார்கள். எனவே இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும். வாக்குப்படியான கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து, நடைமுறைப்படுத்திட வேண்டும். எனவே, இதை வலியுறுத்தி முன்னர் இரண்டு தமிழ்நாடு விவசாய சங்கங்களும் அறிவித்துள்ளபடி ஜூன் 22ம் தேதி அன்று சென்னை கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழகம் முழுதும் கிளர்ந்து வரும் விவசாயிகளின் வலுவான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும்.