Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலூர் விவசாயி உருவாக்கிய புதுரக வெண்டை!

விவசாயம் தெரிந்தாலே போதும். வேறு தொழில் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பலர் உதாரண புருஷர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்த பாபு. தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கொரோனா காலத்திற்குப் பிறகு வேலை இல்லாத சூழல். இருந்தபோதும் தனக்குத் தெரிந்த விவசாயத் தொழிலைக் கையில் எடுத்து, அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு தற்போது முழு நேர விவசாயியாக மாறி இருக்கிறார். பருவத்திற்குத் தகுந்தபடி பலபயிர் சாகுபடி செய்துவரும் பாபு, தற்போது வெண்டை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் சிவப்பு, பச்சை ரக வெண்டை விதைகளில் இருந்து புதிய ரகத்தையும் உருவாக்கி அசத்தி இருக்கிறார். அவரைப் பற்றியும் அவரது சாகுபடி நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் அவரை சந்தித்தோம்.

``தாத்தா, அப்பா காலத்தில் நெல்லும் கரும்பும்தான் சாகுபடி செய்வார்கள். எங்கள் கிராமத்தில் இப்போது விவசாயம் பெருமளவு குறைந்துவிட்டது. என்னைப்போல சிலர்தான் இன்னும் விவசாயத்தை விடாமல் செய்துவருகிறோம்’’ என பேச்சைத் தொடங்கி, தொடர்ந்து பேசினார். ``சிறுவயதிலிருந்தே விவசாயம் எனக்கு பரிட்சையமான தொழில்தான். ஐ.டி.ஐயில் வேலை பார்க்கும்போதும் கூட என்னால் முடிந்தளவு விவசாயத்தை செய்து அதிலும் வருமானம் பார்த்து வந்தேன். கொரோனா காலத்திற்குப் பின், வேலை இல்லாமல் போன பிறகுதான் முழுநேரமாக விவசாயம் செய்யலாமென முடிவெடுத்து செய்து வருகிறேன். எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில்தான் தக்காளி, மிளகாய், வெண்டை, கத்தரி, முள்ளங்கி மற்றும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறேன். ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வகையான காய்கறிகள் பயிரிடுவேன். கடந்த முறை பீர்க்கன் பயிரிட்டு இரண்டு நாளுக்கொரு முறை அறுவடை செய்து, நானே நேரடியாக விற்பனை செய்து வந்தேன். அது முடிந்ததும், தற்போது சிவப்பு மற்றும் பச்சை வெண்டை சாகுபடி செய்து வருகிறேன். விவசாயம்தான் இனி எனக்குத் தொழில் என்றான பிறகு, மண்ணை பாதுகாக்க வேண்டுமென நினைத்தேன். அதனால், ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இயற்கை உரங்களுக்கு மாறினேன். தொழு உரம், இயற்கை கரைசல்கள், வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன். அதேபோல, நாட்டு வெண்டை விதை களைத்தான் சாகுபடி செய்து வருகிறேன். இதனை 20 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்திருக்கிறேன். மீதமுள்ள இடத்தில் வேறு சில காய்கறிகளும், தென்னை மரமும் வைத்திருக்கிறேன்’’ என்றவர், வெண்டை சாகுபடி நுணுக்கங்கள் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

``வெண்டை விதைகளை விதைப்பதற்கு முன்பு நிலத்தில் தொழு உரமிட்டு மண்ணை மேம்படுத்துவேன். அதன்பின்தான் வெண்டையை விதைப்பேன். விதைத்ததில் இருந்து ஒன்றரை மாத காலத்தில் அறுவடையை ஆரம்பிக்கலாம். ஆரம்ப காலங்களில் குறைவாகவே மகசூல் கிடைக்கும். அதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அறுவடை செய்யலாம். எங்கள் பகுதியில் இயற்கை விவசாயிகள் சார்பில் நம் சந்தை என்ற சந்தை இயங்கி வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காய்களைப் பறித்து அந்த சந்தையில் விற்பனை செய்கிறேன். அதுபோக, எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் நேரடியாகவும் விற்பனை செய்கிறேன். இதற்கு முன்பு, ஐந்தடுக்கு முறையில் பந்தல் காய்கறிகளுக்கு நடுவே பல விதமான காய்கறிகள் சாகுபடி செய்து வந்தேன். ஒவ்வொரு காய்கறிகளும் வெவ்வேறு நாட்களில் சாகுபடிக்குத் தயாராகிவிடும். தினமும் ஏதாவதொரு காய்கறி அறுவடை எனது நிலத்தில் நடந்தபடி இருக்கும். இயற்கை முறையில் சாகுபடியில் செய்வதால் விளைச்சல் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், இவற்றை விற்பனை செய்யும்போது கூடுதல் விலைக்கு மக்கள் வாங்கிக் கொள்கிறார்கள். அந்தளவிற்கு, இயற்கையில் விளைந்த பொருட்களுக்கு சந்தையில் மதிப்பு இருக்கிறது.

இந்த விவசாயம் போக 2 மாடுகளை வளர்த்து வருகிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை எங்கள் தேவைக்கு போக மீதமுள்ளதை விற்பனை செய்கிறேன். இதிலும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. வேறு ஒரு வேலைக்குச் சென்றால் என்ன சம்பாதிக்க முடியுமோ அதனை எனது வயலில் இருந்தே சுயமாக சம்பாதித்து வருகிறேன். தினசரி வருமானத்திற்கு இந்த விவசாயம் நன்றாகவே கைகொடுக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.

தொடர்புக்கு:

பாபு: 99947 37108.

காய்கறி சாகுபடி போக தனியாக 20 சென்ட் நிலத்தில் 60 தென்னை மரங்களை வளர்த்து வரும் பாபு, அதிலிருந்து கிடைக்கும் தேங்காயை நேரடியாக விற்பனை செய்யாமல் எண்ணெயாக மாற்றியும், அந்த எண்ணெயைக் கொண்டு சோப்பு தயாரித்தும் விற்பனை செய்து வருகிறார்.

சிவப்பு மற்றும் பச்சை வெண்டை விவசாயத்தில் ஒரு புதுமையையும் செய்திருக்கிறார் இந்த விவசாயி. அதாவது இந்த இரண்டு ரக விதைகளையும் ஒன்றாக ஊன்றி, ஒன்றாகவே வளரச் செய்து, சிவப்பு வெண்டைப் பூவையும், பச்சை வெண்டைப் பூவையும் ஒன்றாக இணைய வைத்துள்ளார். இந்த இரண்டு பூக்களும் ஒன்றாக மகரந்தசேர்க்கையில் ஈடுபட்டு, சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் புது ரக வெண்டையாக மகசூல் தருகிறது.