சர்ச்சையை கிளப்பிய பிரபல மாடல் அழகி; நிலவில் மனிதன் கால் பதிக்கவே இல்லை..! ‘நாசா’ விஞ்ஞானியின் பதிலடியால் பரபரப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க மாடல் அழகியும், தொலைக்காட்சி பிரபலமுமான கிம் கர்தாஷியன், நிலவுக்கு மனிதன் சென்றது குறித்த சர்ச்சையான கருத்தைக் கொண்டிருப்பதாக பல ஆண்டுகளாக இணையத்தில் வதந்திகள் பரவி வந்தன. எனினும், அவை பெரும்பாலும் நம்பத்தகுந்த ஆதாரமற்ற கேலிச் செய்திகளாகவே கருதப்பட்டு வந்தன. இந்த வதந்திகளுக்கு இதுவரை கிம் கர்தாஷியனோ அல்லது நாசா அமைப்போ எந்தவிதமான பதிலும் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கிம் கர்தாஷியன் தனது நிகழ்ச்சியிலேயே இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘கடந்த 1969ம் ஆண்டு அப்போலோ - 11 என்ற விண்கலம் மூலம் மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது ஒரு நாடகம். அதுபோன்று ஒன்றும் நடக்கவில்லை. குறிப்பாக, நிலவில் காற்று இல்லாதபோது அமெரிக்கக் கொடி எப்படி அங்கு அசைந்தது? விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரினின் தவறாக மேற்கோள் காட்டப்பட்ட கருத்து, நிலவின் புகைப்படங்களில் நட்சத்திரங்கள் ஏன் இல்லை?’ போன்ற கேள்விகளை முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, நாசாவின் தற்போதைய நிர்வாகியான சீன் டஃபி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிம் கர்தாஷியனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆம்... கிம் கர்தாஷியன், நாங்கள் இதற்கு முன்பு 6 முறை நிலவுக்குச் சென்றுள்ளோம். அதைவிட சிறந்த செய்தி ஒன்று உள்ளது.
அதிபரின் தலைமையில் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் மீண்டும் நிலவுக்குச் செல்லவிருக்கிறது. இத்திட்டத்தின்படி மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவோம். நீங்கள் கென்னடி விண்வெளி மையத்தில் நடைபெற உள்ள ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஏவுதல் நிகழ்வைக் காண வரவேண்டும்’ என்று அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
