Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பாரம்பரிய நெல் சாகுபடி... நாட்டு மாடுகள் வளர்ப்பு...சாதித்துக்காட்டும் பட்டதாரி விவசாயி!

தற்போதைய நாகரீக வாழ்க்கையில் படித்த இளைஞர்கள் பலர் வெளியூர் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளில் பணிபுரியவே அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே பட்டப்படிப்பு படித்தாலும் தங்கள் பூர்வீக தொழிலான விவசாயத்தைத் தொடர ஆர்வம் கொள்கிறார்கள். சாத்தான்குளம் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் சுரேஷ் கண்ணன் என்ற இளைஞரும் அந்த வகையில் தங்கள் பூர்வீக தொழிலான விவசாயத்தைக் கையில் எடுத்து, அதில் வெற்றிகளைக் குவித்து வருகிறார். ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் இவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு நல்ல மகசூல் எடுத்து வருகிறார். இவரது விவசாய முறைகள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்கும் நிலையில், ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ``கடந்த 2010ம் ஆண்டில் திருச்செந்தூர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தேன். எனது தந்தை நயினார் டவுன் பஞ்சாயத்தில் செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையைப் போல் அரசு வேலைக்கோ, சாப்ட்வேர் நிறுவனங்களில் லட்சங்களில் சம்பளம் பெறவோ எனக்கு விருப்பம் இல்லை. எங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்தாலே போதும் என நினைத்து அதற்கான பணிகளைத் தொடங்கினேன்.

அதுவும் எந்தவித ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என களத்தில் இறங்கினேன். ஆரம்பத்தில் எனது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் இணைந்து விவசாயத்தைக் கவனித்தேன். இப்போது நானே முழுவீச்சாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டேன். சாத்தான்குளம் பகுதியில் சடையன்கிணறு- கல்விளை செல்லும் சாலையில் உள்ள எங்களது தோட்டத்தில் நிலக்கடலை, உளுந்து மற்றும் காய்கறி பயிர்களை பருவத்திற்கு ஏற்றவாறு சாகுபடி செய்கிறேன். இதுபோக தற்போது சத்து மிகுந்த பாரம்பரிய நெல் ரகமான மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு இருக்கிறேன். இதற்கு வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பஞ்சகவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்தி வருகிறேன். பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க இஞ்சி, வெள்ளைப்பூண்டு, வேப்பம் புண்ணாக்கு, கோமியம் ஆகியவற்றை தெளிக்கிறேன். இதனால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து விளைச்சலும் நன்றாக இருக்கிறது. மற்ற சார்பு நெல் வகைகளின் பருவ காலம் 70 நாட்கள்தான். ஆனால் இந்த மாப்பிள்ளை சம்பா ரகம் 180 நாட்களாகும். இதைப் பயிரிட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. மாப்பிள்ளை சம்பா நெல் நல்ல முறையில் வளர்ந்து பசுமையாக காட்சி தருகிறது.

இதே பகுதியில் நாட்டுக்கோழிகள் இயற்கையான முறையில் வளர்த்து வருகிறேன். மேலும் பசுமாடுகள், ரேஸ் காளைகளும் வளர்த்து வருகிறேன். மாடுகள் வளர்ப்பதால் அவற்றின் மூலம் கிடைக்கும் சாணத்தை பயிர்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். எனது தோட்டத்தில் விளையும் விளைபொருட்களை நெல்லை கிருஷ்ணாபுரத்தில் உள்ள இயற்கை வேளாண் அங்காடியில் விற்பனை செய்கிறேன். இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு தற்போது மார்க்கெட்டில் நல்ல கிராக்கி உள்ளது. பலதரப்பினரும் ரசாயன உரங்களில் தயாராகும் உணவுப் பொருட்களை கைவிட்டு கூடுதல் விலை கொடுத்தாவது இயற்கை உரங்களில் பயிரிட்ட உணவுப் பொருட்களை விரும்பி வாங்குகிறார்கள். இதனால் என் போன்றோருக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கிறது.

நான் விவசாயத்தில் உயர்வதற்கு எனது பெற்றோரும் ஒரு காரணம். அவர்கள்தான் உனக்கு பிடித்த தொழிலை செய் என்று ஊக்கம் கொடுத்தனர். விவசாயப் பணிகளை தொடங்கியபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இயற்கை விவசாயத்தை நல்ல முறையில் செய்து வருவதால் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அனைத்து பயிர்களுக்கும் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதால் மகசூல் அதிகமாக கிடைப்பதுடன், நிலத்தின் தன்மையும் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது’’ என நெகிழ்ச்சியாக பேசும் சுரேஷ் கண்ணனின் இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிட்ட வேளாண்துறை உதவி இயக்குநர் ராமலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் அவரைப் பாராட்டி ஊக்கம் தருகிறார்கள்.

இவரது சுரேஷ் கண்ணனின் விவசாய நிலத்தைப் பார்வையிட்ட சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுஜாதா கூறுகையில், ``முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் 2025-26 திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் சுரேஷ் கண்ணனின் நிலத்தில் மாதிரித்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிக்கு இயற்கை வேளாண் இடுபொருட்கள், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிக்கும் கொள்கலன்கள் மற்றும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆகியவை வாங்கிட மானியம் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும்பொழுது அதற்கான உயிர்ம சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரித்திடல், அருகில் உள்ள விவசாயிகளை இயற்கை வேளாண்மையை நோக்கி ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

தொடர்புக்கு:

சுரேஷ் கண்ணன்: 63794 42753.