டிஜிட்டல் உலகில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள தகவல் தொடர்பு மற்றும் இணைப்பு தளங்களே சமூக வலைதளங்கள் ஆகும். அறிவை வளர்க்கவும், உலகை இணைக்கவும் இது காரணியாக உள்ளது. ஆனால் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் சமூகவலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்த `ஜென் ஸி’ தலைமுறையினரின் போராட்டங்களால் ஆட்சி மாற்றத்தை சந்தித்துள்ளன. ரீல்ஸ்கள் போட்டு பொய் பரப்புரை மூலம் ஆட்சிக்கு வர முடியும் என்பது தமிழ்நாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற ரீல்ஸ்கள் கடந்த ஒரு மாதமாக வட இந்தியா முழுவதும் பரப்பப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு பாலாறும், தேனாறுமாக ஓடுகிறது.
கோயில்களில் பக்தர்கள் போடும் காணிக்கைகளை பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. பசுவதைக்கு தடை, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தால் அவர்களது மருத்துவ செலவை அரசே ஏற்கிறது. பெண்கள் அதிலும் சிறுமிகளை பாலியல் சீண்டல்களை செய்தால் குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு அல்லது உடனடியாக மரண தண்டனை வழங்கப்படுகிறது என கலர் கலராக ரீல்ஸ் பரப்பப்படுகிறது. இதுபற்றி வட இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ரீல்ஸ் போடப்பட்டு உள்ளது. இதனை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இது அபத்தமான அல்லது முட்டாள்தனமான நிகழ்வாகும்.
தமிழ்நாட்டில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. மகளிர் உரிமை தொகை ரூ.2,500 தரவில்லை. பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் தரவில்லை. 100 நாட்கள் ஆட்சியில் சட்ட, ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. மின்வெட்டால் மக்கள் அவதி உள்பட பல அவலங்கள் பட்டியல் நீள்கிறது. ஆனால், இதனை மறைத்து வட மாநிலங்கள் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் ஒரு வீடியோவுக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்து பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. நூற்றுக்கணக்கான ரீல்ஸ் போடப்பட்டதற்கு கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் கொடுக்கும் மாபியா கும்பல் யார்? என்பதை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இந்தியாவை ஆளக்கூடிய சக்தி, நம் தலைவரை வடமாநிலத்தவர்கள் வரவேற்கிறார்கள் என மூத்த அமைச்சர் செங்கோட்டையனும், விஜய் பிரதமராக நீங்கள் உழைக்க வேண்டும் என ஜெகதீஸ்வரி உள்பட பல அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பேசி வருகின்றனர். சட்டமன்றத்திலும், வெளியிலும் அமைச்சர்கள், மாநில நலன், புதிய திட்டங்கள் குறித்து பேசாமல் முதல்வரை துதி பாடுவதில் தான் அவர்களுக்குள் கடும் போட்டி இருக்கிறது. தற்போது தவெக அரசின் செயல்பாடுகளால் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்னோக்கி செல்கிறது.
அதற்குள் இந்தியா முழுவதும் பொய் பிரசாரம் செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பொய் பிரசாரங்களை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தவறிவிட்டால் எதிர்காலத்தில் பொய்யுரைகளின் கையில் நாடு சிக்கி விடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இவ்விஷயத்தில் ஒன்றிய அரசு, பாகுபாடு பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.



