Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போலி பணி நியமன ஆணை மூலம் ரூ.1.15 கோடி மோசடி!

கடலூர்: ஒன்றிய அரசு பணிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இருவரிடம் ரூ.1.15 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடலூரைச் சேர்ந்த தம்பதி மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. போலி பணி நியமன ஆணைகள் வழங்கியதுடன், டெல்லியில் மூன்று மாதங்கள் பயிற்சியும் அளித்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடலூர் சாவடி குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுருத்தி மற்றும் பரத்குமார் தம்பதி. இவர்கள் ஒன்றிய அரசின் ரயில்வே, வருமான வரித்துறை மற்றும் வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை நம்பி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த கட்டாரி அபினேஷ் மற்றும் தசாரி ஜானகிராமன் ஆகிய இருவரும் வேலைக்காக இவர்களை அணுகியுள்ளனர்.

இதில், கட்டாரி அபினேஷுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவணை முறையில் ரூ.75 லட்சத்தை தம்பதி பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவருக்கு பணி நியமன ஆணை வழங்கியதுடன், வருமான வரித்துறையில் பணி நியமனம் கிடைத்துள்ளதாகவும், இதற்காக டெல்லியில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் அபினேஷை சேர்த்துள்ளனர். அங்கு அவர் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், பயிற்சி முடிந்த பின்னர் தம்பதியை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்கள் செல்போன் அழைப்புகளை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல், தசாரி ஜானகிராமனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றையும் தம்பதி வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களை எடுத்துச் சென்று பணியில் சேர முற்பட்டபோது, அவை போலியானவை என்பது தெரியவந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் தம்பதியை தொடர்புகொண்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வீட்டுப் பக்கம் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இருவரிடம் மட்டும் ரூ.1.15 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதேபோல் மேலும் பலரிடம் தம்பதி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் குவித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, தம்பதியின் பின்னணி மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடலூர் மாவட்ட போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.