Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

செங்குன்றத்தில் முதல் மனைவியை ஏமாற்றி 2 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது

ஆவடி: செங்குன்றம் அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (43). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கவுசல்யா (40) மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் மனைவி கவுசல்யாவுக்குத் தெரியாமல் ஏராளமான பெண்களுடன் ஆட்டோ டிரைவர் சாந்தகுமார் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2017ல் மற்றொரு பெண்ணை சாந்தகுமார் 2வது திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கும் தற்போது 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் 2வது மனைவி சாந்தகுமாரை பிரிந்து சென்ற நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல் மனைவியான கவுசல்யாவிடம் மன்னிப்பு கேட்டு, திருந்தி வாழ்வதாக சாந்தகுமார் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் பொத்தூர் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு கருப்பசாமி கோயில் கட்டி, போலி சாமியாராக குறி சொல்லி வந்துள்ளார். கோயிலுக்கு வரும் இளம்பெண்களிடம் பழகி ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி கவுசல்யாவுக்கும் போலி சாமியார் சாந்தகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தன்னிடம் குறி கேட்க வந்த விமான பொறியியல் படித்த 22 வயதான இளம்பெண்ணை போலி சாமியார் சாந்தகுமார் 3வது திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரை ஏமாற்றி மேலும் 2 பெண்களை போலி சாமியார் சாந்தகுமார் திருமணம் செய்துள்ளதாக நேற்று ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் மனைவி கவுசல்யா புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் 2 பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றுதல் உள்பட 3 குற்றப்பிரிவுகளின்கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், நேற்று மாலை முதல் மனைவியை ஏமாற்றி 2 பெண்களைத் திருமணம் செய்த போலி சாமியார் சாந்தகுமாரை மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.