ஃபேக் கால் (Fake call) செயலி என்பது பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சங்கடமான அல்லது பாதுகாப்பற்ற சூழல்களில் இருந்து தங்களை பாதுகாப்பாக விலக்கிக் கொள்ள உதவும் ஒரு எளிய தொழில்நுட்ப கருவி. சங்கடமான சூழலில் உண்மையில் யாரும் அழைக்காத போது, கைப்பேசியில் ஒரு நிஜ அழைப்பு வருவது போல ரிங் டோன், காலர் பெயர், புகைப்படம், பேசும் வசதி ஆகியவற்றுடன் செயல்படுவதால், வெளியிலிருப்பவர்களுக்கு அது உண்மையான கால் என்றே தோன்றும்.பொதுவாக தேவையற்ற நெருக்கடி, பிடிக்காத உரையாடல், சந்தேகமான நபரின் அணுகல் அல்லது சமூக அழுத்தம் என்று நேரடியாகச் சொல்ல முடியாத சூழல்களில் இந்த போலி அழைப்பு செயலி மூலம் அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடலாம். “வீட்டிலிருந்து கால் வந்திருக்கிறது”, “அவசரம், போக வேண்டும்” என்ற காரணத்தை இயல்பாக உருவாக்க இந்த செயலி உதவு கிறது. இந்த செயலியின் இன்னொரு முக்கிய அம்சம், பயம் அதிகரிக்கும் முன்பே சூழலை மாற்றி விடும் திறன். நேரடி மோதல், கடுமையான மறுப்பு அல்லது பதட்டமான நிலைக்கு செல்லாமல், நாகரிகமாக அந்த இடத்திலிருந்து விலக இது உதவுகிறது. தனியாக வெளியே செல்லும் போது, இரவு நேர பயணங்களில் அல்லது அறிமுகமில்லாத இடங்களில் கூட, இந்த செயலி மனதளவில் ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படுகிறது.
+


