Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்; அமைச்சர் விழாவை புறக்கணித்த எம்எல்ஏக்கள்: மேடையில் யாரும் இல்லாததால் திரும்பிச் சென்றார் நிர்மல் குமார்

மதுரை: தவெகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மதுரையில் அமைச்சர் விழாவை அக்கட்சியின் 2 எம்எல்ஏக்களே புறக்கணித்தனர். விழாவுக்கு வந்தபோது மேடையில் யாரும் இல்லாததால் அமைச்சர் நிர்மல் குமார் கோபத்துடன் கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. குற்ற வழக்குகளை பின்னணியாக கொண்ட பலரை அமைச்சராக நியமித்ததாக புகார் எழுந்தது. மேலும், கட்சி முக்கிய நிர்வாகிகளின் ஆதரவுடன் அமைச்சர் பதவிகளை பெற்றவர்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள எம்எல்ஏக்கள், விஜய் நடிகராக இருந்தபோது ஆரம்ப காலக்கட்டங்களில் உடனிருந்தவர்கள், மேடைகள், பொது இடங்கள், விழாக்களில் மோதிக் கொள்வது சகஜமான ஒன்றாகி விட்டது. இது கட்சிக்குள் புகையும் கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

இதன் உச்சகட்டமாக மதுரையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரையில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா மதுரை மருத்துவக் கல்லூரி ஐஎம்ஏ ஹாலில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தவெக எம்எல்ஏக்களான கல்லாணை (மதுரை வடக்கு), கோபிசன் (மதுரை தெற்கு) ஆகியோர் பங்கேற்பதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, அதாவது, காலை 9.50 மணிக்கே அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார்.

மேடையில் ஜனநாயகன் படப்பாடல்கள், தவெக கட்சி பாடல்கள் பின்னணியில் ஒலித்தபடி இருந்தது. நிர்வாகிகள், விழா பங்கேற்பாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, அமைச்சர் நிர்மல்குமார் வேகவேகமாக மேடையில் ஏறினார். அடுத்தநொடி அதிர்ச்சி அடைந்தார். மேடையில் ஒருவர் கூட இல்லை. மேலும், தவெக எம்எல்ஏக்களான கல்லாணை, கோபிசன் வரவில்லை. சிறிது நேரம் அமைச்சர் சுற்றும்முற்றும் பார்த்தபடி இருந்தார். மேடையில் அமைச்சர் இருக்க, யாருமே உடன் இல்லாததை கண்டு, அதிர்ந்த வெளியில் நின்றிருந்த சங்க நிர்வாகிகள் ஓடிவந்து, சில நிமிடங்களில் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் வந்து விடுவர். நிகழ்ச்சியை தொடங்கி விடலாம் என தெரிவித்தனர்.

ஆனாலும், அமைச்சர், ‘என்னங்க இப்படி’ என்று கடும் அப்செட்டிற்கு ஆளானார். மேடையில் கூட அமரவில்லை. குத்துவிளக்கு கூட ஏற்றாமல் அவசரம் அவசரமாக கீழே இறங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைகளை பிசைந்தபடி நிற்க, அமைச்சரை நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளிடம், `‘அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் உள்ளன. புறப்படுவோமா’’ எனக் கூறியபடி உடனடியாக புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அமைச்சர் சென்ற அரை மணி நேரம் கழித்து 2 தவெக எம்எல்ஏக்களும் தாமதமாக வந்தனர். விழா மாலை வரை நடந்தபோதும், இரு எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். எப்படியும் இடையில் வந்து விட்டுப்போவார் என்று அமைச்சரின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து விழா ஏற்பாட்டாளர்கள் காத்திருந்தும், கடைசி வரை அவர் வரவில்லை. வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை கிளம்பிச் சென்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உட்கட்சி பூசல்: மதுரை மாவட்ட தவெக பொறுத்தவரை, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவான கல்லாணை ஆரம்ப காலத்தில் இருந்து விஜய் ரசிகர் மன்றத்தில் இருப்பவர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவர். தேர்தலில் வென்று தவெக ஆட்சி அமைக்க தயாரானபோது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமென கல்லாணை எதிர்பார்த்திருந்தார். ஆனால், பல கட்சிகள் மாறி தவெக வந்து திருப்பரங்குன்றம் ெதாகுதியில் வென்ற நிர்மல்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. மேலும், கூட்டணியில் உள்ள காங். கட்சியை சேர்ந்த விஸ்வநாதனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் கல்லாணை கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு கட்சியில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லையென அதிருப்தியாகவும் இருந்துள்ளார். இதனால் விழாவுக்கு தாமதமாக வந்திருக்க வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், தவெகவின் அரசியல் வியூக அமைப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு நெருக்கமானவர் நிர்மல்குமார் என்பதால், அவர் மேலிடத்தில் உள்ள சிலர் உத்தரவின்படி புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இடையேயான முட்டல், மோதல் ஒன்றும் புதியதல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற விழாவை, அமைச்சர்களான விஜயபாலாஜி, விஜயலட்சுமி ஆகியோர் புறக்கணித்தனர்.

ஏற்கனவே, செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் வழங்கப்படுவதை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் விரும்புவதில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. இதையடுத்தே புஸ்ஸி ஆனந்தின் தீவிர ஆதரவாளர்களான விஜயபாலாஜி, விஜயலட்சுமி ஆகியோர், செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியானது. இது தவெக மூத்த நிர்வாகிகள் இடையே பனிப்போர் நிலவுவதை வெளிக்காட்டுவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெண் அமைச்சர்கள் இடையே ‘வெடித்த’ கோஷ்டி பூசல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் வென்ற கீர்த்தனா, ராஜபாளையம் தொகுதியில் வென்ற ஜெகதீஸ்வரி இருவரும் அமைச்சர்களாக உள்ளனர். இதில் பாஜவின் தீவிர ஆதரவாளராக இருந்த கீர்த்தனா, கடைசி நேரத்தில் தவெகவில் சேர்ந்த உடனே சீட் வழங்கப்பட்டது. இதற்கு ஆதவ் அர்ஜுனா முக்கிய சிபாரிசாக இருந்தார். இதனால் சிவகாசியில் தனக்கு சீட் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இருந்த தவெக விருதுநகர் மாவட்ட செயலாளரான மாரிசெல்வம் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் இவர் மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான ஜெகதீஸ்வரிக்கு முழு ஆதரவை வழங்கினார். இதனால் மாவட்டத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு அதிகரித்தது. ஒரு விழா மேடையில் கீர்த்தனா பெயருக்கு கீழே என் பெயரை எப்படி போடலாம்? என் துறை சார்ந்த விழாவில், என் பேரைத்தானே முதலில் போட வேண்டுமென அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதமே நிகழ்த்தினார். தற்போது இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக செல்பி போட்டாலும், புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர் என்பதாலேயே ஜெகதீஸ்வரி இருட்டடிப்பு செய்யப்படுவதாக கட்சிக்குள்ளேயே புகைச்சல் கிளம்பியுள்ளது.

பல பவர் சென்டர்கள்

தவெகவில் ஒரே ஒரு பவர் சென்டர் தான். அது நான் தான் என்று முதல்வர் விஜய் கூறினாலும் அங்கு பல பவர் சென்டர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் என அந்த பவர் சென்டர்கள் நீள்கிறது. இவர்களை காட்டிலும் திரைமறைவில் இருந்து ஒருவர் தவெகவை இயக்கி வருகிறார். அவர்தான் தவெகவின் முதன்மை அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. முதல்வர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். இவரது அணியில் இருப்பவர் தான் அமைச்சர் நிர்மல்குமார். இதனால் ஆதவ், புஸ்ஸியிடம் இருந்து விலகி, தனி ஆவர்த்தனம் செய்து வருவதாக கட்சியினர் கூறுகின்றனர். இதனாலும் நிர்மல்குமாரை பல எம்எல்ஏக்கள் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.