Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டிரெண்டாகும் முகக் கொலுசுகள்...ஜென் z ஃபேஷன் உலகில் புது கலாட்டா!

தொன்று தொட்டு இருந்து வரும் நகை அலங்காரங்களில் இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த மாற்றம் நடக்கவே இல்லையே என புலம்பிய ஜென் z செய்த வேலைதான் இந்த திடீர் ஃபேஸ்லெட் ( Facelet), முகக் கொலுசு, முக செயின் (Face Chain), முக பிரேம் ( face Frame) எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். யாரைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் இணையத்தில் இருக்கும் பெண்கள் முகத்தில் பாதி கண்ணாடி இல்லாத பிரேம் போன்ற ஒரு வஸ்துவை கண்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டு ரீல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இது பிரைடல் நகைகளில் புதுவரவு என்கிறது டேட்டாக்கள். இதென்ன புது கலாட்டா என்றால் ஜாலியா இருக்கு, கால்களை அலங்கரிக்கவே நகைகள் இருக்கும் போது முகத்துக்கு இருக்கக் கூடாதா? என்கிறார்கள் ஜென் z குழந்தைகள். எப்படி, எங்கே துவங்கியது இந்த முகக் கொலுசு டிரெண்ட்? இதோ நாட்டுக்கு முக்கியமான ஆய்வில் இறங்கினோம்.

இதனை இந்தியாவில் துவங்கியவர்கள் மூவர். முதல் நபர் தேஜஸ்வி பிரகாஷ், இந்தி சீரியல்கள் மற்றும் மராத்திய திரைப்பட நடிகை. பிரியங்கா சஹர் சவுத்ரி. மற்றும் இஷா மால்வியா, மூவருமே இந்தி சீரியல்களில் டாப். இந்த மூவர் கூட்டணி உருவாக்கிய புது ட்ரெண்ட் தான் இந்த முக செயின் டிரெண்ட். இணையத்தில் ட்ரெண்ட் சரி, இதற்கு முன்பு இதற்கு வரலாறு உண்டா என்றால் முகலாயர்களின் ஆட்சிக் காலம் வரையில் நம்மை இழுத்துச் செல்கின்றது இந்த முக செயின். அதாவது அரேபியா கால ராயல் பெண்கள், நாட்டியப் பெண்கள், பெண் இசைக் கலைஞர்கள் தங்கள் முகத் துணிகளை இணைக்கும் ஒரு செயின் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்துதான் இந்த கலாசாரம், முகலாயர்கள் வருகையால் இந்தியாவிற்குள் குறிப்பாக ராஜஸ்தானி பெண்களிடம் முதலில் பரவியது.

காலப்போக்கில் இந்த செயின் முக வடிவத்தையே மறைப்பதாகவும் மேலும் வெகு நேரம் திருமணங்களில் அமரும் மணப்பெண்களுக்கு ஒரு வித உறுத்தல் கொடுப்பதாலும் இந்த வழக்கம் மறைந்துபோனது. அதற்கு பதிலாக கண் கண்ணாடிகளில் இணைக்கப்பட்ட செயின்கள், கண்ணாடி பிரேம்களில் வேலைப்பாடுகள் என மாறத் துவங்கியது. அந்த ட்ரெண்டு தான் இப்போது மீண்டும் ஜிப்சி மணப்பெண்கள் டிரண்டாக மானாவாரியாக பரவிக்கொண்டிருக்கிறது. சரி இந்த ட்ரெண்டை ஏன் ஜென் z பெண்கள் இவ்வளவு விரும்புகிறார்கள் என்றால் இதற்கு பின்னணியில் மிகப்பெரிய போராளி அரசியல் இருக்கிறது என்கிறார்கள் பெண்ணியவாதிகள்.

அதாகப்பட்டது, கொரிய அனிமேட்டட் சீரிஸ், படங்கள், சீரியல்களில் போராளி, ஆக்ஷன் கேர்ள்ஸ், டாம் கேர்ள் இளவரசிகள் அணியும் ஆஸ்தான நகையாக இந்த செயின்தான் பளபளக்கிறது. மேலும் பழங்கால ரோமானிய, ஜப்பான், சீனா யுத்த பெண் வீரர்கள் இந்த நகையை பயன்படுத்தி முகக் கவசம் போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இந்த நகை வரவுதான் ஃபேஷன் உலகம் மினிமல் மோடிலிருந்து, மேக்சிமல் மோடுக்கு மாற அறிகுறி என்கிறார்கள் ஃபேஷன் ஆய்வாளர்கள். மேலும் இப்போதெல்லாம் மணப்பெண்களுக்கு நிகராக தோழிகள் மற்றும் உறவுக்காரப் பெண்கள் என அனைவருமே திருமணங்களில் கிராண்ட் லுக்கில் வருகிறார்கள் எனில் மணப்பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்யாசம். இப்படி யோசித்து இந்த ஒரு நகையை அணிந்தாலே சட்டென கிராண்ட் லுக் கொடுத்துவிடும் என்பதாலேயே இந்த முக செயின் நகைகளுக்கு இக்காலப் பெண்கள் டிக் அடிக்கிறார்கள். ஒரு நகை முழுக் கூட்டத்தையும் தன் பக்கம் திசை திருப்பி பேச வைத்துவிடும். என்பதாலேயே திருமணம் மார்க்கெட்டிலும் இந்த நகைகள் தற்போது தங்கத்தில் வரத் துவங்கியிருக்கின்றன. பிரபல தங்கநகை விற்பனையாளர்களே ஜென் z ஸ்பெஷல் ஃபேஸ்லெட் என இதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதில் என்னென்ன வகைகள் உள்ளன..?

1. திருமண ஃபேஸ்லெட் (Bridal Facelet)

திருமண லெஹங்கா, சேலை ஆகியவற்றுடன் அணியப்படுகிறது.

2. இந்திய வெஸ்டர்ன் ஃபேஸ்லெட் (Indo-Western Facelet)

கவுன், கோ-ஆர்ட் செட், ஃப்யூஷன் உடைகளுடன்.

3. மெட்டாலிக் ஃபேஸ்லெட் (Metallic Facelet)

வெள்ளி அல்லது தங்க மெட்டல் சங்கிலி களால் செய்யப்பட்ட வடிவம்.

4. பீட் ஃபேஸ்லெட் (Pearl Facelet)

முத்துக்களால் செய்யப்பட்ட மென்மையான முக செயின்.

5. போல்ட் ஃபேஸ்லெட் (Gothic Facelet)

கருப்புக் கற்கள், சங்கிலிகள் இணைந்த டார்க் ஃபேஷன் லுக். இது ஜிப்சி ஸ்டைல் வகைகள்.

- ஷாலினி நியூட்டன்.