Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்மம், சர்வபூபாலம், கற்பக விருட்சம், முத்துபந்தல், மோகினி அலங்காரம், கருடன், அனுமந்தன், யானை, சூரியபிரபை, சந்திரபிரபை வாகனங்களில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8ம் நாளான நேற்று காலை மலையப்பசுவாமி மகாரதத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று காலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயிலில் இருந்து தேவி, பூதேவி தாயார் சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர்.

அங்குள்ள மண்டபத்தில் தேவி, பூதேவி தாயார் சமேத மலையப்பசுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதனையடுத்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடினர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். 9 நாட்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றதால் இன்று மாலை தங்க கொடி மரத்தில் இருந்து பிரம்மோற்சவ கொடி இறக்கப்படுகிறது.

ரூ.2.52 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையன் கோயிலில் நேற்று 71,443 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹2.52 கோடி காணிக்கை செலுத்தினர். பிரம்மோற்சவ நிறைவு நாளையொட்டியும், புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையொட்டியும் இன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 12 அறைகளின் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.