அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளின் மீது 200% என்கிற கடுமையான இறக்குமதி வரி திட்டத்தை அறிவித்துள்ளார். இது, இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில், உலகிலேயே அதிகளவு ஜெனரிக் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான்.
இந்த வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வரும்போது, இந்திய மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் பெருமளவு குறையும். அமெரிக்க சந்தையில் இந்திய மருந்துகளின் விலை கணிசமாக உயரும். அதனால், இந்திய மருந்துகளை அமெரிக்கர்கள் வாங்குவது தவிர்க்கப்படும். வேறு நாடுகளின் குறைந்த விலை மருந்துகளுக்கு செல்வார்கள். இதனால் ஏற்றுமதி குறைந்து, இந்திய மருந்து நிறுவனங்களின் வர்த்தகம் பேரிடியாக இறங்கும். இதனால், அமெரிக்கா விடுத்து, வேறு சந்தைகளை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாய நிலை உண்டாகும்.
இந்த நீண்டகால வரி திட்டம் காரணமாக இந்திய மருந்து நிறுவனங்கள் இனிவரும் காலங்களில், தங்களது உற்பத்தி மற்றும் முதலீட்டு உத்திகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதாவது உற்பத்தி மையங்களை அமெரிக்காவிலேயே நிறுவும் நிர்ப்பந்தம் உண்டாகும். அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பால், இந்திய நிறுவனங்கள் கடுமையான பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்திய மருந்து நிறுவன பங்குகளின் சரிவுக்கான காரணங்கள் நேரடியாக அமெரிக்காவுடன் தொடர்புடையவை.
உண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி விதிப்பு என்கிற பெயரில் இந்தியா மீது ஒரு குண்டை வீசியுள்ளார். ‘’ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு...’’ என்பதுபோல், மோடி எனது மிகச்சிறந்த நண்பர் எனக்கூறிக்கொண்டு, இந்திய பொருட்களுக்கு வரி மேல் வரி (Tariff) விதிப்பதில் டிரப் கில்லாடியாக திகழ்கிறார். டிரம்பின் பெரும்பாலான வரி விதிப்புகள் சட்டவிரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனிச்சையாகவும், பிற நாடுகளுடன் கலந்து ஆலோசிக்காமலும் டிரம்ப் விதித்த அதீத வரிகள் செல்லாது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இந்திய பொருட்களுக்கு 25% முதல் 50% வரை கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தினார். இதற்கு பதிலடியாக இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது. இந்த சூடு குறைவதற்குள், தற்போது ஜெனரிக் மருந்துகள் மீது 200% வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த பிடிவாத போக்கு, இந்தியா-அமெரிக்கா இடையே பரஸ்பர வர்த்தக போரை உருவாக்கியுள்ளது.
உலக நாடுகளிடம் அமெரிக்கா பலவீனமாக இல்லை என்பதை நிரூபிக்கவும், அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ (America First) கொள்கையின்படி செயல்படவும் டிரம்ப் விரும்புகிறார். இதே நிலைப்பாட்டைத்தான் பிற நாடுகளும் எடுக்கும் என்பதை அவர் மறந்து விடுகிறார். இனி ஒவ்வொரு நாடும் தனது பிடிவாத போக்கை கையில் எடுக்கும்.
அப்படி எடுத்தால், சர்வதேச அளவிலான பொருளாதாரம் நிலைகுலைந்துவிடும். உலகமயமாக்கல் அர்த்தமற்றதாகி விடும். ஆகவே, வரி விதிப்பு உள்பட சர்வதேச அளவில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அந்தந்த நாடுகளுடன் கலந்தாலோசித்து, அளவோடு வரி விதிப்பதே சீரான உறவுக்கு வழிவகுக்கும்.


