Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பலூரில் ₹2,440 கோடியில் காலணி பூங்கா விரிவாக்கம்; 2028க்குள் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு: வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கிய பங்கு

தமிழ்நாட்டின் மைய பகுதியில் உள்ள மிகச்சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள இந்த வறண்ட பூமியில் தான், மக்காச்சோள சாகுபடியிலும், பருத்தி சாகுபடியிலும், சின்ன வெங்காய சாகுபடியிலும் மாநில அளவில் முதலிடம் பெற்று மலைக்க செய்வதோடு, பசுமை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவில் அதிகப்படியான பாலினை உற்பத்தி செய்து வெண்மை புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவம், பொறியியல் வேளாண்மை, கலை அறிவியல், கல்வியியல் என 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கொண்டு கல்விப் புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொழிற்புரட்சியை ஏற்படுத்த வித்திட்டது திமுக ஆட்சிதான். எறையூர் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் சர்க்கரை ஆலையையும், 13 ஆண்டுகளுக்கு முன்பு நாரணமங்கலத்தில் டயர் தொழிற்சாலையையும் கொண்டு வந்து, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தது திமுக அரசு தான். கடந்த 2023ம் ஆண்டு பெரம்பலூர் எறையூரில் இளைஞர்களின் எதிர்கால கனவை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியதோடு, ஓராண்டில் அதன் உற்பத்தியைத் தொடங்கியது திமுக ஆட்சியில்தான். தேசிய அளவில் தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

காலணிகளை பொறுத்த வரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிகளவில் உள்ளன. இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சாத்திய கூறுகளும் உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது. இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், கடந்த 2022 ஆக.23 அன்று “தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை -2022” தமிழ்நாடு முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

‘‘அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி” என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்தது. கடந்த 2022 நவம்பர் 28ல் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் புதிதாக அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து ஓராண்டில் துல்லியமாக அதாவது 2023 நவம்பர் -29ல் ₹400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமாக நிறுவப்பட்ட, (JR One) காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அன்று முதல் அங்கு உலகத் தரம் வாய்ந்த காலணிகள் உற்பத்தி தொடங்கி விட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, வீடுகளில் பயன்படுத்தவும் பயணங்களில் பயன்படுத்தவும், அலுவலகங்களில் பயன்படுத்தவும் ஏதுவாக, பல்வேறு ரகங்களில், பல்வேறு வண்ணங்களில், பல்வேறு விலைகளில், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தனது உற்பத்தியை தொடங்கிய தொழிற்சாலை, தற்போது அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபீக் அஹமத், மேலாண்மை இயக்குநர் ஜாங் ராங் வு, (JROne) இயக்குநர் ஜாங் உள்ளிட்டோர் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடுகளை பல்வேறு கட்ட தேர்வுகளின் அடிப்படையில், தகுதிகளின் அடிப்படையில் செய்து வருகின்றனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும். இந்நிறுவனம், 2028க்குள் ₹2,440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்திடவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.