39 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் பாமகவுக்கும், ராமதாசுக்கும் சிலர் சடுகுடு காட்டி வருகிறார்கள்: அன்புமணி மீது ஸ்ரீகாந்தி கடும் தாக்கு
கடலூர்: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் காரணமாக அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய ராமதாஸ் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியையும், இளைஞர் சங்க தலைவராக ஜிகே மணியின் மகன் தமிழ்குமரனையும் நியமித்தார். இதையடுத்து புதிய செயல் தலைவரான ஸ்ரீகாந்தியின் மேற்பார்வையில் தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று ஒரே நாளில் 39 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன.
அதன்படி, கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் கடலூர் அருகே கண்ணாரப்பேட்டையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கலந்து கொண்டு பேசியதாவது: நான் ராமதாசின் நம்பிக்கைக்குரிய நபராக தொடர்ந்து பயணிப்பேன். இப்போது பாமகவுக்கும், ராமதாசுக்கும் சிலர் சடுகுடு காட்டி வருகிறார்கள். அதற்கு நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் நமது கொள்கைகளை பின்பற்றி பணிகளை செய்வோம்.
அனைத்தையும் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். எந்த கூட்டணி என்பதை தெளிவாக அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஸ்ரீகாந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘கட்சியை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டேன். தற்போது மீண்டும் செயல் தலைவராக அந்த பணியை தொடர்வேன். கட்சியில் உள்ள பிரச்னைகளை பாமக நிறுவனர் விரைவில் சரிசெய்வார். டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் பற்றி பேசுபவர்கள், அதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது யாரை குறிப்பிட்டேன் என அவர்களுக்கே தெரியும்’ என்றார்.
