2025 யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை!!
டெல்லி : 2025 யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படும் மதிப்புமிக்க போட்டித் தேர்வு யுபிஎஸ்சி தேர்வு ஆகும். இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் மூன்று படிநிலைகளில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. தேர்வை எழுதிய தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.
முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு வெற்றி பெற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிகரித்து 77.08% ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 87 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கடந்த 35.29% மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 54.84%ஆக அதிகரித்துள்ளது. யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனை, தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.