Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எக்ஸாம்!

ஒரு சமூகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கல்வியும் படிப்பும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதற்கான தீர்வுகளும் முடிவுகளும் மிக முக்கியம். அதிலும் அரசாங்கத்தையே வழிநடத்தும் பணியாளர்களுக்கான அரசு தேர்வுகளில் மோசடி நடந்தால் என்ன ஆகும். அதை மையமாக வைத்து தான் ‘‘எக்ஸாம்’’ வெப்தொடர் வெளியாகி இருக்கிறது.

ஊட்டியில் புதிய பெண் டிஜிபியாக வரவிருக்கும் மறைமலைக்கு(அதிதி பாலன்) பதிலாக அவரைக் கடத்தி அடைத்து வைத்துவிட்டு அந்தப் பதவிக்கு ஆள்மாறாட்டம் செய்து வருகிறார் ஜான்சி(துஷாரா விஜயன்). தொடர் துவங்கியது முதலே இவர் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையில் ஒரு மீனவர் சமூகத்தை சேர்ந்த மாணவன் அரசு தேர்வு எழுதி எப்படியாவது ஜெயித்து அரசாங்க பணியில் உட்கார முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இன்னொரு புறம் ஜான்சியின் தேடல் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்கிறது. அரசு தேர்வில் நடக்கும் மோசடிகள் அது எப்படி நிகழ்கிறது, இதற்கு உயர் மட்டக் குழுவில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் எப்படி உதவுகிறார்கள் என ஜான்சியின் தேடல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகிறது. பெண் கல்வி கற்கவே பல தடைகளை கடந்து வந்து நிற்கும்பொழுது இப்படியான அரசு தேர்வுகளில் மோசடிகள் நடந்தால் இன்னும் மாணவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் அது மிகப்பெரிய தடைக்கல்லாகவே மாறிவிடும். இதனைத் தான் ஆழமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறது இந்த வெப் தொடர்.

‘‘ என் பொண்ணு தினமும் அதிகாலையில் எழுந்து குரூப் எக்ஸாமுக்கு படிப்பா. சில நேரம் ராத்திரி முழுக்க படிச்சிட்டு இருப்பா. நான் காலையில எழுந்து டீ அல்லது காபி ஏதாவது போட்டு கொடுப்பேன். நான் மட்டும் இல்ல எத்தனையோ மாணவர்கள் நடு இரவில் கூட படிச்சிட்டு இருப்பாங்க. அவங்க பெற்றோர்கள் அவங்க கூட தூங்காம இருந்து அவங்களுக்கு உதவி செய்திட்டு இருப்பாங்க. எல்லாம் எதுக்காக நிச்சயம் பாஸாகி ஒரு நல்ல அரசாங்கப் பணி கிடைச்சிடும் என்கிற நம்பிக்கையில் தானே. கோச்சிங், உழைப்பு, நம்பிக்கை அதில் இப்படி மோசடி செய்து யாருக்கோ கிடைக்க வேண்டிய வாய்ப்பு இப்படிக் குறுக்கு வழியில் பிடுங்க பார்க்கிறீர்களே நியாயமா?’’ என வெப் தொடரில் டிரைவராக நடித்திருக்கும் சரவணன் சக்தி சொல்வார். இதுதான் மொத்த வெப் தொடரின் கரு.

‘‘எல்லா இடங்களிலும் போலியாக இருப்பவர்களின் கேள்விக்கு சுலபமா பதில் கிடைச்சிடும். ஆனால் பிறந்ததிலிருந்தே எல்லா இடத்திலும் நேர்மையாக இருக்கற எங்கள மாதிரி ஆளுங்களுக்குதான் பதில் கிடைக்கிறது கஷ்டம். என்பார் துஷாரா விஜயன். உண்மைதான் எங்கே பணத்தை நகர்த்தினால் எந்த வேலை நடக்கும் எந்த பதில் கிடைக்கும் என்பது குறுக்கு வழியிலேயே வாழும் நபர்களுக்கு தெரியும். இவர்களின் மோசடி காரணமாக அதிகம் பாதிக்கப் படுவது நேர்மையான உழைக்கும் மக்கள் தான்.

படித்து முன்னேறி வாழ்க்கையில் ஒரு அங்கீகாரத்தை பெற நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு அதற்கான வழிகள் சுலபமாக இருக்க வேண்டும் என்பதால்தான் இப்படியான அரசு தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகளை பொறுத்து பணிகள் கொடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இடையில் இருக்கும் இந்த இடைத்தரகர்கள் மற்றும் ஒரு சில பண முதலைகளால் அரசாங்கத்தின் மீதும் கெட்ட பெயர் வரும் மேலும் மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்கிற கருத்தை ஆழமாகவே வைத்திருக்கிறது இந்த ‘‘எக்ஸாம்'' வெப் தொடர்.

‘‘விக்ரம் வேதா’’ திரைப்பட புகழ் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இத்தொடரில் துஷாரா விஜயன், ‘அருவி’ அதிதி பாலன், அப்பாஸ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.

- மகளிர் மலர் குழு