Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடைத்தேர்தலில் இலை வேட்பாளருக்கு செலவு செய்ய முடியாதுன்னு கைவிரித்த மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் மறைமுகமாக போட்ட வாய்ப்பூட்டை உடைக்க ஒதுக்கப்பட்டவங்க எல்லாரும் திங்கிங் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரர் சிஎம் ஆகணுமுன்னு திட்டம் போட்டு கட்சிக்கு வந்தாரு.. உடனடியாக அவருக்கு மாநில தலைவர் பதவியும் கிடைச்சது.. பழம் தின்னு கொட்டை போட்ட மூத்த நிர்வாகிகளை அவரது போலீஸ் மூளையை வைத்து தூக்கி ஓரம் கட்டியதாக கட்சிக்காரர்களால் பரவலாக பேசப்பட்டு வருது..

கட்சி என்றால் நான், நான் என்றால் கட்சி என்ற நிலையை உருவாக்கி வச்சிக்கிட்டாராம்.. தன் கட்சியினரையே சமூக வலைதளங்களில் போட்டுத் தாக்கும் வகையில் சம்பளத்திற்கு வார் ரூமை அமைச்சிக்கிட்டாராம்... இதெல்லாம் எவ்வளவு நாளுதான் நடக்கும் என்ற நிலையில், ‘‘பொறுத்தது போதும் பொங்கி எழு’’ என்பதுபோல, கவர்னர் பதவியை ராஜினாமா செஞ்சிக்கிட்டு தேர்தல் களத்தில் குதித்த மாஜி தலைவரு பொங்கிட்டாராம்.. கட்சியில் குற்ற பின்னணி கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறாங்க..

கட்சியினரையே அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்பேன்னு மாஜி போலீஸ்காரரின் அடிபொடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தாரு.. பூனைக்கு யார் மணி கட்டப்போறாங்க என்ற நிலையில் இருந்த மூத்த நிர்வாகிகள் எல்லோரும் இவரது பேட்டிக்கு பிறகு மகிழ்ச்சியில ஓரணியில திரண்டிருக்காங்களாம்.. தன்னை யாரும் தொட்டுப்பார்க்க முடியாதுன்னு இருந்த மாஜி போலீஸ்காரருக்கோ இது பெரும் பேரிடியாக அமைஞ்சிருக்காம்.. தன்னை எதிர்க்க யாருக்கு துணிவுன்னு நினைச்ச அவரு, மாஜி தலைவர் உள்பட யாரும் இனி பேட்டியே கொடுக்கக் கூடாதுனு மறைமுகமா வாய்ப்பூட்டு போட்டிருக்காராம்.. அதற்கு உதாரணமா தன்னை வைச்சே சொல்லிட்டாராம்..

இனிமேல் கட்சி அலுவலகத்தில் வைத்துதான் பேட்டி கொடுக்கப்படும், விமானநிலையத்துல பேட்டி கிடையாதுன்னு சொல்லி இருக்காரு.. இது தன் மூலமா மூத்த தலைவர்களுக்கு சொல்லாம சொல்லும் டெக்னிக்காம்.. இதன் மூலம் தன்னை தவிர வேறு யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது என்பதுதான் அவரது திட்டமாம்.. இத்தடையை உடைக்க கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவங்க யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரன்சி பிரச்னையால் இடைத்தேர்தலுக்கான இலைக்கட்சி வேட்பாளர் தேர்வு தாமதமாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், தேர்தல் களம் அங்கு விறுவிறுப்பாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததுமே திமுக வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் யார் என்று இதுவரை தெரியாமல் அக்கட்சியினர் பரிதாபத்தில் இருக்காங்களாம்.. ஆனால் இந்த மாவட்ட மாஜி அமைச்சரோ ரகசிய கூட்டம் நடத்தி வேட்பாளர் தேர்வை நடத்தி முடித்து விட்டாராம்..

இருப்பினும் யார் செலவு செய்வது என்பதில்தான் இதுவரை சிக்கலாக இருக்கிறதாம்.. எடப்பாடி தரப்பிலோ இடைத்தேர்தல் செலவு முழுவதையும், மாவட்ட மாஜி அமைச்சர் தலையில் கட்டிவிட முடிவெடுத்திருந்ததாம்.. ஆனால் அவரோ நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் முழுசெலவையும் நான்தான் செய்தேன். மீண்டும் என்னால் முடியாதுன்னு விடாப்பிடியாக கூறி கைவிரித்து விட்டாராம்.. இதனால் செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கதிகலக்கத்தில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.

கடந்த இடைத்தேர்தல்போல் பாமக ஆதரவு இல்லாததால் கண்ணுக்கு தெரிஞ்சி தோற்க... எதற்கு செலவு செய்யணும்னு எடப்பாடி அணுகும் ஒவ்வொரு நிர்வாகியும் களமிறங்க தொடர்ந்து பின்வாங்குவதால் இலை இப்போதே கருகும் நிலையில் இருப்பதாக அக்கட்சியினரே புலம்பி தவிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நமக்கு நல்ல எதிர்காலம் வரும் என நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் வைத்தியானவர் ஈடுபட்டுள்ளாராமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தாமரையுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட தேனிக்காரர் படுதோல்வியை சந்தித்தாரு.. இதனால் அவரது அணியில் உள்ள நிர்வாகிகள் சிலர் விலகி வர்றாங்க.. நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ தேனிக்காரரின் தோல்வி குறித்து எவ்வித கருத்தும் சொல்லாமல் மவுனமாக இருந்து வர்றாராம்... ஆனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள வைத்தியானவரின் ஆதரவாளர்கள் இனி அரசியலில் இருந்தால் எதிர்காலம் நமக்கு இருக்காது என நினைக்கிறார்களாம்..

இதனால் விரைவில் அதிரடி நடவடிக்கையில் இறங்க அவர்கள் முடிவு செய்திருக்காங்களாம்.. இதை கேள்விப்பட்ட வைத்தியானவர், நமக்கு நல்ல எதிர்காலம் வரக்கூடும்.. இதனால் தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம் எனக்கூறி நிர்வாகிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்... இதை கேட்டு ஆதரவாளர்கள், வைத்தியானவருக்காகவாவது கொஞ்ச நாள் காத்திருப்போம்.. தொடர்ந்து இப்படியே சென்றால் மாற்று கட்சிக்கு சென்று விடலாம்னு முடிவு செய்துள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலையோட தொடர்பில் இருக்கும்படி உத்தரவிட்டதால் உற்சாகத்தில் இருக்கும் முரசு நிர்வாகிகள் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊரான மாங்கனி நகருக்கு முரசு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரு வந்தாராம்.. கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அவரு, திடீரென மாவட்ட நிர்வாகிகளை அழைச்சு பேசினாராம்.. எம்பி தேர்தலில் இலை கட்சியோட வைத்த கூட்டணி, நல்ல முறையில் இருந்தது..

அதனால், அடுத்த எம்எல்ஏ தேர்தலிலும் அவங்களோடதான் கூட்டணியில் இருப்போம்.. எனவே இலை கட்சிக்காரங்களோட நல்ல முறையில் ரிலேஷன்ஷிப் பாலோ பண்ணுங்க.. அதோட நம்ம கட்சியையும் வளர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்க.. அப்போது தான் அடுத்த எலக்‌ஷன்ல அதிக சீட்டை கேட்டு பெற முடியுமுன்னு கூறிட்டு போனாராம்.. இதனால் சோர்வில் இருந்த மாங்கனி மாவட்ட முரசு கட்சி நிர்வாகிங்க கொஞ்சம் உற்சாகமாகி இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.