ஆதாரம் இருந்தால் பண்ணுங்க...நாங்களா வேணாம்னோம்... கொடநாடு ஏ-1 குற்றவாளின்னா எடப்பாடியை ஜெயில்ல போடுங்க... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேட்டி
மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும்/ பார்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகிதான் டிடிவி.தினகரன். அவர் சொல்வதற்கெல்லாம், நாங்கள் பதில் சொல்ல முடியாது. எடப்பாடிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டுமே செங்கோட்டையன் பெற்றுள்ளார். அந்த தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் எடப்பாடி பெற்றுள்ளார்.
செங்கோட்டையன் முதல்வர் வாய்ப்பை 2 முறை விட்டுக் கொடுத்து விட்டதாக கூறுகிறார். வாய்ப்பு வந்தால் கொடுத்து இருப்பாரா? ஏன் விட்டுக் கொடுத்தார்?, யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா? பிக்பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். எடப்பாடி முதலமைச்சராக வருவதற்கு யாரும் பின்புலத்தில் இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது முதலமைச்சராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை, அதிமுக நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் தெரிவித்ததால் செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஏ1 முதல் குற்றவாளி என்பது உண்மையானால் அவரைத் தூக்கி உள்ளே போடுங்கள். நாங்களா வேண்டாம் என்கிறோம்? சட்டப்படி போடுங்க. ஆதாரம் இருந்தா இதைப்பத்தி பேசுறவங்க கொடுக்க வேண்டியதுதானே? சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் போன்ற துரோகிகளால்தான் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தோம். திமுகவிலிருந்து பிரிந்து சென்ற துரோகிகளை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ‘எம்எல்ஏக்கள்லாம் ஓட்டு போட்டுதான் சி.எம். ஆனாராம்’
‘தற்போது எடப்பாடி பழனிசாமி சேரும் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம் என டிடிவி கூறுகிறார். எடப்பாடி துரோகி என்கிறார். அவர் அப்பா வீட்டு பணத்தையா எடுத்துக்கொண்டு சென்று விட்டார்? எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டதால் அவர் முதலமைச்சரானார். மூன்று முறை முதலமைச்சராக இருந்தார் ஓபிஎஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
அனைத்து எம்எல்ஏக்களையும் ஒன்றிணைத்து எனக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. சாதாரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியையே அனைத்து எம்எல்ஏக்களும் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். ஏன் ஓபிஎஸ் வரவில்லை. அது இயற்கை, விதி, அவ்வளவு தான். தற்போது ஒன்றிணைய வேண்டும் என கூறுகின்றனர்’ என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
* ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டில் பணம் பதுக்கல்; சசிகலா, டிடிவி.தினகரன் குடும்பம் கொள்ளை கும்பல் ‘திடுக்’ குற்றச்சாட்டு
அதிமுகவின் 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் பழநி ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முறையும் திமுக தான் வெற்றி பெறும் எனக் கூறுகிறார். போடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நிற்கும்போது, அவரை எதிர்த்து நின்ற வெண்ணிற ஆடை நிர்மலா என்ற புறா கட்சி சுயேச்சை வேட்பாளருக்கு ஏஜென்டாக செயல்பட்டவர் இவர். செங்கோட்டையன், டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து விட்டனர்.
இனி இந்தியாவையே அழித்து விடுவார்கள் என செய்திகள் வெளியாகும். கட்சியினால் வளர்ந்து கட்சி தொண்டர்களால் உருவாகி, இன்று தோழர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற செங்கோட்டையன் கேவலமான நிலையில் உள்ளார். தேவர் ஜெயந்தி விழாவில், டிடிவி.தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மூத்தவரான செங்கோட்டையனை நடுவில் வைத்து இடிக்கின்றனர். அவர் ஓரமாக செல்கிறார். முதல் நாளே இந்த நிலை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தால் தான் நமக்கு மரியாதை. ஈனப்பிறவிகளாக உள்ளனர். ஓபிஎஸ் போடாத நாடகம் இல்லை.
ஆடாத ஆட்டம் இல்லை. அத்தனையும் செய்து பார்த்தார். ஓபிஎஸ், தினகரன் உட்பட அனைத்து நபர்கள் தலைமேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. லண்டனில் ஓட்டல் வைத்திருப்பதாக தினகரன் மீது வழக்கு உள்ளது. ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது டிடிவி.ஏராளமாக கொள்ளையடித்து பணத்தை வெளிநாட்டில் வைத்துள்ளார். அதனை ஒன்றிய அரசு கண்டுபிடித்து வைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த சசிகலா, டிடிவி ஆகியோர் பல கோடி சொத்து சேர்த்துள்ளனர்.
ஒன்றிய அரசு அவர்களை சும்மா விட மாட்டாங்க. டிடிவி.தினகரன் சிறைக்கு போகும் நாள் வெகு தூரம் இல்லை. சசிகலா குடும்பம், ஓபிஎஸ், அவரது மகன் உட்பட அத்தனை பேரும் பெரா வழக்கு மற்றும் ஒன்றிய அரசு வழக்குகளில் சிக்கியுள்ளனர். இந்தக் கூட்டணியில் இருந்தால் தான் அவர்கள் வாழ்க்கை பெற முடியும், இல்லையென்றால் கிடையாது. ஜெயலலிதாவின் பெயரை வைத்து கொள்ளையடித்த கும்பல் சசிகலா, தினகரன் குடும்பம். இதற்கு உறுதுணையாக இருப்பவர் ஓபிஎஸ். இவ்வாறு பேசினார்.