ரசாயன இடுபொருட்களின் பின்விளைவுகள் குறித்து பல தரப்பினருக்கும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால் இயற்கை விவசாயம் மீதான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இயற்கை விவசாயம் செய்யப்படும் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் சொந்தமாகவே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியூக்கியாகவும், விளைச்சல் பெருக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படும் எருக்கு இலை கரைசலைத் தயாரித்து பயன்படுத்தி பலன்பெறலாம்.
தேவைப்படும் பொருட்கள்
200 லிட்டர் டிரம், 180 லிட்டர் தண்ணீர், எருக்கஞ்செடிகள் (போதிய அளவு).
எப்படி செய்வது?
முதலில் எருக்கஞ்செடியில் உள்ள தண்டுகளை இலை, பூ, காய்களோடு சேகரித்துக்கொள்ளவும். இதில் தண்டுகளை சிறிது சிறிதாக உடைத்துக்கொள்ளலாம். அதனோடு இலை, பூ, காய்களோடு சேர்த்து 180 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் போட்டு 7 நாட்கள் ஊற விடவும். 7 நாட்களுக்கு பிறகு இந்தக் கரைசலை நன்றாக கலக்கவும். இப்போது தண்டு உள்ளிட்ட அனைத்தும் கொழகொழப்பாக மாறி திரவத்தில் கரைந்திருக்கும். கரையாமல் உள்ள தண்டுகளை வயலில் அப்படியே போட்டு விடலாம். டிரம்மில் உள் திரவத்தை நேரடியாக அல்லது கலக்கி பயன்படுத்தலாம்.
தரைவழி பாசனத்துக்கு...
எருக்கு கரைசலை அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். இதை மாதம் 2 முறை என பயிர்களுக்கு வழங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். பாசன நீரில் அப்படியே கரைசலைக் கலந்து வழங்கலாம்.
இலைவழி தெளிப்புக்கு...
பயிர்களுக்கு இலைவழியாக தெளிக்க எருக்கு கரைசல் 5 லிட்டர் + தண்ணீர் 5 லிட்டர் என கலந்து தெளிக்கலாம். இதை நெல் முதல் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் மற்றும் பல்வேறு இயற்கை பூச்சி விரட்டி கரைசல்களுடன் (பூசணிக்காய் கரைசல், வேப்ப நீர் முதலியவை) கலந்தும் பயன்படுத்தலாம்.
எருக்கு இலை கரைசலின் நன்மைகள்
பயிர்களுக்கு எருக்கு இலை கரைசல் தெளிப்பதன் மூலம் மக்னீசியம், போரான் சத்துகள் தொடர்ச்சியாக கிடைக்கும். பயிர்களின்தண்டுகள் நன்கு வளர்ச்சி அடையும். இலையில் பச்சை கட்டும். பூக்கள், பிஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து, மகசூல் கூடுதலாக கிடைக்கும். முக்கியமாகநோய், பூச்சிகளின் தாக்கம் வெகுவாக குறையும்.


