ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சரளையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்காக, அக்கட்சியினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதுகுறித்து, நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளருமான செங்கோட்டையன் தலைமையில் தவெகவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று அனுமதி கேட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பரப்புரை சரளையில் 19 ஏக்கரில் நடைபெற உள்ளது. காவல்துறையினர் விதிமுறைகளை கடிதங்களாக வழங்கியுள்ளனர். காவல்துறை சார்பில் 84 விதிமுறைகள் வழங்கியுள்ளனர். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகளை மேற்கொள்வோம். கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி விஜய் பேசுகிறார். இக்கூட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள். 16ம் தேதிக்கு பதிலாக 18ம் தேதி பிரசார கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க உள்ளோம். அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்ட பிறகு தலைமையிடம் எடுத்துரைத்து தேதியை மாற்றுவது குறித்து ஒப்புதல் பெறப்படும். போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
* தவெகவில் ஐக்கியமாகும் மாஜிக்கள் யார்? ‘தவெக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவாரா?
என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். முன்னாள் அமைச்சர்கள் யார் யார் இணைவார்கள் என தெரிவித்தால், அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படும். தேர்தல் நெருங்க நெருங்க எந்த வகையில் கூட்டணி அமையும், எந்த வகையில் விட்டுக்கொடுப்போம் என்பது எல்லாம் தெரியும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
* நயினாரை டெபாசிட் இழக்க வைப்போம்
‘அண்ணாமலை-டிடிவி தினகரன் சந்தித்தது குறித்து திடீரென கேட்டால் கருத்து சொல்ல முடியாது. எதற்காக, சந்தித்தார்கள் என்பது என்னால் யூகிக்க முடியாது. நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர்ந்தால் நன்றாக இருக்கும். நயினார் நாகேந்திரன் பேசுவது அனைத்தும் அதிமுகவிற்காக தான் பேசுகிறார். பாஜ-விற்கு அல்ல. மற்ற இயக்கத்தை புண்படுத்துவது நாகரிகமாக இருக்காது. ஒரு கவுன்சிலர் கூட வர முடியாது என நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை டெபாசிட் இழக்க வைப்பது தான் தவெகவின் லட்சியம் என்று சொல்லி இருக்கிறேன்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.


