ரூ.53 கோடியில் விரிவாக்க பணி: ஈரோடு-பவானி சாலையில் மரங்கள் வெட்டி அகற்றம்
ஈரோடு: ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ரூ.53 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டி அகற்றும் பணி இன்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலை இரு மார்க்கத்திலும் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதை ஏற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பவானி சாலையில் விரிவுபடுத்த வேண்டிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அதன்படி பவானி சாலையில் பிளாட்டினம் மகாலில் இருந்து சுண்ணாம்பு ஓடை வரை குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்தவும், கிறிஸ்துஜோதி பள்ளி முதல் சத்தி சாலை சந்திப்பு வரை விரிவு படுத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று பவானி சாலையை 5.3 கி.மீ தூரத்திற்கு இரு பகுதிகளாக விரிவுப்படுத்த அரசு ரூ.53 கோடி நிதி ஒதுக்கியது. இப்பணியை கடந்த மாதம் 6ம் தேதி அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சாலை விரிவாக்கம் செய்ய வேண்டிய பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்றவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு-பவானி சாலையில் விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் அகற்றும் பணி இன்று துவங்கியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக மரங்கள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.