எர்ணாவூர் ஜோதி நகர் பகுதியில் இரவில் 4 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்: போலீசாரிடம் வாக்குவாதம்
திருவொற்றியூர்: எர்ணாவூர் ஜோதி நகர் பகுதியில் 4 மணிநேரம் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பிரச்னையை தீர்க்காத மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை நீடிப்பதால், மறுநாள் வேலைக்குச் செல்வோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க, சிறு குறு தொழில்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கணினி சார்ந்த அலுவலகங்கள் மின்சாரமின்றி முடங்கியுள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசும் - மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மின்தடை குறித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தொலைபேசி மையமான மின்னகத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், வடசென்னை பகுதிகளாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எர்ணாவூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எர்ணாவூர் பகுதியில் உள்ள ஜோதி நகர், முருகப்பா நகர் அம்பேத்கர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் சிறு தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாததால் தொழில் வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஜோதிநகர் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் ஜோதி நகர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் 11 மணி ஆகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் வெளியே வந்து அமர்ந்து மின்சாரம் வரும் என காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜோதி நகர் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார், மின் தடையால் எல்லாருக்கும் சிரமம் இருக்கத்தான் செய்யும், இப்படி மறியல் செய்தால் போக்குவரத்திற்கு சிரமமாக இருக்கும். போலீசிடம் தகவல் சொல்லுங்கள் என சமாதானம் பேசினர். அதற்கு மின்தடை ஏற்பட்டால் போலீசிடம் தான் சொல்ல வேண்டுமா? மின்வாரிய அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டு போட்டு சென்று விடுகின்றனர். புகார் தெரிவித்தாலும் அலட்சியமாக இருக்கின்றனர். எனவே மின் விநியோகம் செய்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம், எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் சாலை ஓரமாக நின்றனர். சிறிது நேரத்துக்கு பின் மின்சாரம் வந்தது. இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


