எர்ணாகுளம் - பெங்களுரு வந்தே பாரத் ரயில் இனி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சர் நடவடிக்கை
சென்னை: சமீபத்தில் கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், பெங்களூரு -எர்ணாகுளம் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ஜவுளி நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல வேண்டும் என்று தொழில் அதிபர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, அவர், இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் நேரில் கோரிக்கை வைத்தார். உடனடியாக திருப்பூர், ஈரோடு, சேலத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையேயான வந்தே பாரத் ரயில் கோவை உள்பட ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண் 26651) அதே நாள் மதியம் 1.50 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (26652) இரவு 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு காலை 5.23 மணிக்கும், சேலத்திற்கு காலை 8.13 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 9 மணிக்கும், திருப்பூருக்கு காலை 9.45 மணிக்கும், கோவைக்கு காலை 10.33 மணிக்கும், பாலக்காட்டிற்கு காலை 11.28 மணிக்கும், திருச்சூருக்கு மதியம் 12.28 மணிக்கும் சென்றடைகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 2 நிமிடங்கள் ரயில் நிற்கிறது.
மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திருச்சூருக்கு மதியம் 3.17 மணிக்கும், பாலக்காட்டிற்கு மாலை 4.35 மணிக்கும், கோவைக்கு மாலை 5.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.03 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 6.45 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.18 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு இரவு 10.23 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கோவை ரயில் பயணிகள் இடையேயும் தொழில்துறையினர் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
