Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காடுகளை சிதைக்காத வாழ்க்கை முறை பழங்குடிகள் வாழும் இடங்களில் மட்டுமே 80% பன்மை உயிர்ச்சூழல்: ஆய்வாளர்கள் பெருமிதம்

மண்ணோடும், தாவரங்களோடும், விலங்குகளோடும் சுமூகமாக வாழும் ஒப்பற்ற மனிதர்கள் தான் பழங்குடிகள். இவர்களை பூர்வீக இயற்கை காவலர்கள் என்று சொல்வதே மிகவும் கூட அத்தனை பொருத்தமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கல்விப்பூர்வமான விழிப்புணர்வு இப்போது வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே தமது வாழ்க்கை முறையில் இயற்கையை பாதுகாத்து, உலகின் ஒப்பற்ற வளங்களை காப்பாற்றி தந்த ஈடற்ற பெருமைக்குரியவர்கள் தான் பழங்குடியின மக்கள். இப்படிப்பட்ட நமது பூர்வகுடிகளான பழங்குடி மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி (இன்று) உலக பழங்குடியின மக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தநாளில் பழங்குடியினர் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு அவர்களின் உரிமைக்கான முழக்கங்களை ஏற்படுத்தி வருகின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

உலகளவில் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். 5 ஆயிரம் கலாச்சாரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் இவர்கள், 7ஆயிரம் மொழிகளில் பேசுகின்றனர். உலக மக்கள் தொகையில் இவர்களின் பங்கானது 5சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஏழைகள் குறித்த கணக்கெடுப்பில் 15சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவே உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை ஆதிவாசிகள் என்ற சொல் இந்திய துணைக்கண்டம் முழுவதும் காணப்படும் பழங்குடியின மக்களை குறிக்கிறது. 1930ம் ஆண்டில் பழங்குடியின மக்களுக்கு பூர்வீக அடையாளத்தை வழங்குவதற்காக அரசியல் ஆர்வலர்களால் சமஸ்கிருத மொழியிலிருந்து இந்த சொல் எடுக்கப்பட்டது. உலகின் மொத்த பழங்குடியின மக்கள் தொகையில் 8.5சதவீதம் மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இது குறித்து பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாடு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: இந்தியாவில் 705 தனித்தனி பழங்குடியினர் உள்ளனர். கிழக்கில் ஒடிசா மற்றும் மேற்கில் குஜராத், ராஜஸ்தான் வரை நீண்டுள்ளனர். சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் அதிகளவில் பழங்குடியின மக்கள் உள்ளனர். 11சதவீதம் பழங்குடியின மக்கள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளனர். சந்தல்கள் என்பவர்கள் இந்தியாவின் பழமையான பழங்குடிகளில் ஒருவராக உள்ளனர். இந்திய பழங்குடியினரை பொறுத்தவரை எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. எழுதப்பட்ட எந்த உரைக்கும் அவர்கள் வாழ்க்ைக கட்டுப்படுவதில்லை. இயற்கையை வழிபடுவது தான் அவர்களின் தனித்துவம். இதனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தமுடியாது.

விவசாயம் சார்ந்து வாழ்ந்தாலும் விவசாயிகள் என்ற பட்டியலிலும் அவர்கள் இல்லை. மெகாதிட்டப்பணிகள் மற்றும் நகரமயமாக்கல் நிகழ்வுகளின்போது பழங்குடியினர் மீதான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பரப்பை அழித்து நிறைவேற்றப்படும் திட்டங்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது பழங்குடிகள் தான். ஒரு போரில் எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால் முதலில் படைத்தளபதியை வீழ்த்த வேண்டும் என்பார்கள். அதுபோலத்தான் காடுகளை அழிக்கும் போது அதன் தளபதிகளான பழங்குடியின மக்கள் மீது தான் முதல் குறி வைக்கப்படுகிறது. காடுகளும், வனங்களும் இயற்கையின் கொடைகள். அதன் சுற்றுச்சூழலை சீரழிப்பது தான் தொடரும் இயற்கை பேரிடர்கள் அனைத்திற்கும் காரணம். இதை இயற்கையோடு இணைந்து செம்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் பழங்குடியின மக்கள்.

சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான தீர்வுகளை வடிவமைத்து செயல்படுத்துவதில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. நிலையான பாரம்பரிய சுற்றுச்சூழல் மேலாண்மை என்பது அவர்களால் மட்டுமே சாத்தியமாகும். உதாரணமாக உள்நாட்டு பாரம்பரிய உணவுகளின் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு என்பது இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் விலைமதிப்பற்ற நன்மைகளை ெகாடுக்கிறது. இதை வனப்பகுதிகளில் பண்பட்ட பழங்குடியின மக்களே சிறந்த முறையில் செயல்படுத்த முடியும். பூர்வகுடி மக்களான பழங்குடிகள் வாழும் இடங்களில் மட்டுமே இப்போது 80சதவீதம் உயிர்சூழல் பன்மயம் கொண்டதாக உள்ளது.

எனவேதான் இயற்கை சூழலியல் மேம்பட, நாம் பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் சமீபகாலமாக இயற்கை வளங்களும், வனங்களும் ஆக்கிரமிக்கப்படும் போது அங்கிருக்கும் பழங்குடியின மக்களும் விரட்டப்படுகின்றனர். அல்லது அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி, குறிப்பிட்ட இடத்திற்கு மேல் அவர்கள் நகர்ந்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். பழங்குடிகளுக்கான உரிமைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்ைக தரத்தை உயர்த்த வேண்டும். இதன்மூலம் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் இந்தநாளின் முக்கிய நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற அனைவரும் கரம் சேர்க்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள்

கூறினர்.

5 ஆயிரம் கலாசாரம் 7 ஆயிரம் மொழிகள்

‘‘உலகில் 37 கோடி பூர்வகுடி பழங்குடியின மக்கள் 90 நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவு எனினும் வறுமையின் பிடியில் வாழும் மக்களில் 15 சதவீதம் பழங்குடிகளாகவும் உள்ளனர். இவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு அதிகமான கலாசாரங்களையும், 7 ஆயிரத்திற்கு மேற்பட மொழிகளையும் பேசுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் படாகா, கோட்டா, தோடா, மத்திய பிரதேசத்தில் ேகாண்ட், ஒடிசாவில் கிசான், கர்நாடகாவில் கொடவா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டில் பரவலாக குருபா, மாலத்தீவில் கைரவாரு என்று பல்வேறு பெயர்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அசாமில் கர்பி, அருணாசல பிரதேசத்தில் மிஷ்மி, திரிபுராவில் போராக், மிசோரத்தில் ஹனம் என்ற பெயர்களிலும் பெருமளவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்,’’ என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையின் தாரக மந்திரம்

‘‘பழங்குடிகள் என்றாலே படிப்பறிவு இல்லாதவர்கள், வனவாசிகள், நாகரீக வாழ்க்கையை அறியாதவர்கள் என்ற எண்ணமே நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் பழங்குடிகளுக்கு தன்னிறைவான வாழ்க்கை வாழத்தெரியும். ஆனால் இயற்கையை எதிர்க்காமல் அதன் வளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வாழ்வது தான் அவர்களின் தனிச்சிறப்பு. எல்லாவற்றையும் அடைய ஆசைப்படாமல் தங்கள் தேவைகளை சுருக்கிக் கொண்டு, நிறைவாக வாழ்வது போன்ற பல்வேறு பண்புகளை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எளிமையான வாழ்வியல் முறையே பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு தரும் என்பது தான் பழங்குடிகளின் ஈடற்ற தாரகமந்திரம்,’’ என்பதும் ஆய்வாளர்களின் பெருமிதம்.

சட்டம் முழுமையாக செயல்பட வேண்டும்

‘‘ஊரகம் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் பழங்குடிகளில் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வாடுகின்றனர். அவர்களின் வாழ்வை மேம்படுத்த முதலில் வனஉரிமை அங்கீகார சட்டம் 2006ஐ முழுமையாக ெசயல்படுத்த வேண்டும். இதன்மூலம் பாரம்பரிய விவசாய நில உரிமை, குடியிருப்பு உரிமை, பாரம்பரிய சமுதாய வனநில உரிமைகள் அளிக்க வேண்டும். மேலும், புதிய கல்வி கொள்கை அறிமுகமாகி உள்ள இத்தருணத்தில் பழங்குடி மாணவர்களின் கல்விக்கு போதிய முக்கியத்துவம், வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,’’ என்று சமூகநல மேம்பாட்டு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளது.