Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த பாம்பன் கடலுக்கு அடியில் சென்னை மாணவர்கள் நடனம்

ராமேஸ்வரம்: கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரம் அருகே கடலுக்கு அடியில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நடனம் ஆடினர். உலக நடன தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தாரகை ஆர்த்தனா, அஸ்வின் பாலா ஆகியோர் ராமேஸ்வரம் அருகே பாம்பன், அக்காள்மடம் வடக்கு கடல் பகுதியில், தண்ணீருக்கு அடியில் நடனம் ஆடி கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தாரகை ஆர்த்தனா பரதநாட்டிய உடையில் நடனமாடி அசத்தினார். மேலும் கடலுக்குள் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் வலைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

இதனை வீடியோவாக பதிவு செய்து, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது’’ என தெரிவித்தனர். கடலுக்கு அடியில் பள்ளி மாணவர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே எவ்வித முன் அனுமதியும் இன்றி ஆபத்துகள் நிறைந்த பாம்பன் வடக்கு கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்வு குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.