லண்டன்: இந்தியாவில், மாதம்தோறும் சராசரியாக 500 மில்லியன் பயனர்களையும், 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சி தொகுப்பையும் கொண்டுள்ள ஜியோ ஹாட்ஸ்டார், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இதில் திரைப்படங்கள், அசல் தொடர்கள், நேரலை விளையாட்டு போட்டிகள், நேரலை நிகழ்வுகள், அனிமேஷன், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொடர்கள் மற்றும் ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100க்கும் மேற்பட்ட சேனல்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என 19 மொழிகளில் உள்ளடக்கங்கள் கிடைக்கின்றன.
ஜியோஹாட்ஸ்டார் இன்று (செப்டம்பர் 2) முதல் இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. இதுகுறித்து ஜியோஸ்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிக பிரிவு தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், ‘இங்கிலாந்தில் ஜியோஹாட்ஸ்டாரை அறிமுகப்படுத்துவதன் மூலம், தெற்காசிய பொழுதுபோக்கின் அசாதாரணமான பன்முகத்தன்மையை, புதுமையான வடிவங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைத்து, இந்த ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறோம்.
உள்ளடக்கங்களை எல்லைகள் தாண்டி எடுத்து செல்வது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல, பார்வையாளர்கள் அதை எவ்வாறு கண்டறிகிறார்கள், அனுபவிக்கிறார்கள் மற்றும் அதனோடு எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பதை புதிய கோணத்தில் மீண்டும் மறுவடிவமைப்பதே எங்களின் லட்சியமாகும்.
அதே நேரத்தில், இங்கிலாந்து பார்வையாளர்களுக்கு தெற்காசிய கதைசொல்லலை மிகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும், ஆழமாக அனுபவிக்கக்கூடியதாகவும், அவர்களின் வாழ்வியலுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றும் ஒரு மையத்தை நாங்கள் உருவாக்குகிறோம்’ என்றார். 3 மாத கட்டணமாக 19.99 யூரோ மற்றும் ஆண்டு கட்டணமாக 69.99 யூரோ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




